Breaking News

தமிழ் மக்களது பிரச்சினைகள் தேர்தல்களுக்கு முன் தீராதா?

அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு முன் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியுள்ளதாகவும், அழுத்தம் கொடுத்துள்ளதாகவும், சர்வதேச சமூகத்துடன் பேசி வந்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா கடந்த 06 ஆம் திகதி திருகோணமலையில் வைத்து கூறியிருக்கிறார்.

மேலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் அனைத்தும் கடந்த காலங்களில் எதிர்க்கப்பட்டதாகக் கூறும் சம்பந்தன் ஐயா, இன்று அந்நிலை இல்லை என்றும், அதற்கு தற்போது இடமில்லை என்றும் கூறியிருக்கிறார். 

அப்படி என்றால், தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏன் இப்போது தீர்க்கக் கூடாது? அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குப் பின்னர் தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நல்ல நாள் உள்ளதா என்ற கேள்வி எமது மக்களிடையே எழுந்துள்ளது. 

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இப்போது எதிர்ப்புக்கள் இல்லை என்றால், இப்போதே – அதுவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டின் கொள்கை வகுப்பு தொடர்பிலான உயர்நிலை அமைப்பான தேசிய நிறைவேற்றுச் சபையில் பங்கெடுத்துவரும் நிலையில் - தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஏன் தீர்க்க முடியாது? எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாவிட்டாலும், ஓரிரு பிரச்சினைகளையாவது தீர்க்கலாம் தானே? 

எனவே, அதற்குரிய நேர்மையும், அவசியமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லை என்பதையே சம்பந்தன் ஐயா போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கருத்துக்களில் இருந்து தெரியவருகின்றது. மேலும், தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை தமது தேர்தல் பிரகடனம் தெளிவாகக் கூறும் என்றும் சம்பந்தன் ஐயா கூறியிருக்கிறார். உண்மை. ஒவ்வொரு தேர்தல்களின்போதும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரகடனங்கள் கூறினாலும், தேர்தல்களுக்குப் பின்னர் அவற்றுக்கு என்ன நடக்கும்? என்பதையும் சம்பந்தன் ஐயா எமது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 

இப்படியே தொடர்ந்தும் எமது மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, தேர்தல் வியாபாரம் நடாத்தி, அதனை வைத்து தமது வயிற்றுப் பிழைப்புக்கான சுயலாப அரசியலில் மட்டும் ஈடுபட்டுவரும் நிலையை மாற்றி, எமது மக்களுக்கு எதையாவது செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போது முன்வரும் என்ற கேள்வியே எமது மக்களின் முன்பாக நீண்ட காலமாக இருந்துவருகிறது. 

இந்த நிலையில், தாங்களும் செய்யாமல், செய்யக் கூடியவர்களையும் செய்ய விடாமல் முட்டுக்கட்டையாக இருந்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இத்தகைய செயற்பாடுகள் எப்போது இல்லாதொழிக்கப்படுமோ, அப்போதுதான் எமது மக்களுக்கு உண்மையான விடிவு கிட்டும் என்பது மட்டும் உறுதியாகும் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.