Breaking News

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து மஹிந்த அறிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான யோசனை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதிப்பேர் இதில் கையெழுத்திட்டுள்ளனர், இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த யோசனையில் அதிகளவானோர் கையெழுத்திடுவது இதுவே முதல் முறை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

பெருந் தெருக்கள் அமைச்சினால் கடனாக பெறப்பட்ட 28 பில்லியன் ரூபா நிதி, பெருந் தெருக்களை நிர்மாணிக்க அன்றி, ஹெலிக்கொப்டர் பயணம் மற்றும் தன்சல் உள்ளிட்ட வேறு தேவைகளுக்காக என்னால் மோசடி செய்யப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். 

எனினும் பெருந் தெருக்கள் அமைச்சின் ஆவணங்களில் தேசிய சேமிப்பு வங்கியிடம் இருந்து குறுகிய காலத்தில் பெறப்பட்ட இந்த கடன் பயன்படுத்தப்பட்ட விதம் தெரியவரும்.  குறித்த 28 பில்லியன் ரூபா பணத்தை பெருந் தெருக்களை நிர்மாணிக்க பயன்படுத்தாது வேறு நடவடிக்கைகளுக்கு செலவிட்டதாக பிரதமர் கூறியது முற்றிலும் பொய். 

தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொய் பிரச்சாரங்கள், பாரிய அளவிலான ஊழல்கள் மற்றும் இதுவரை இல்லாத வகையிலான அரசியல் விரோதிகளின் வேட்டை இந்த நம்பிக்கையில்லா பிரேரணை யோசனைக்கு காரணம் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.