Breaking News

இனவாதம் பேசி தலைதூக்க முயற்சிக்கும் மஹிந்தவை அனுமதிக்க வேண்டாம்!

நாட்டில் இனவாதத்தை தூண்டி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தலை தூக்க முயற்சிப்பதாகவும் அதற்கு பொது மக்கள் இடமளிக்க கூடாதெனவும் மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் நேற்று (03) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் இவ்வாறு கேட்டுக் கொண்டார். 

நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு நியாயம் கிடைக்க நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  நாட்டில் நடைபெறுகின்ற வன்முறைச் சம்பவங்களை நிராகரிப்பதுடன் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு நாட்டில் சட்டம் சீர்குலைந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். 

கடந்த 9 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்து அராஜகத்தினை கட்டவிழ்த்து விட்ட மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தலைதூக்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது.  இனவாதத்தினை தூண்டுவதுடன், வித்தியாவின் படுகொலையின் ஊடாகவும், முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஊடாகவும் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்கி விட்டதாகவும், இனவாதம் தலை தூக்கிவிட்டதாகவும், தெற்கில் இனவாத்தினை தூண்டும் செயலில் மஹிந்த ராஜபக்ஷ இறங்கியுள்ளதாக ராமலிங்கம் சந்திரசேகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  இனவாதத்தினை தலைதூக்க அனுமதிக்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.