வன்னி மாவட்டத்தில் வாழும் மலையக மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை வேண்டும்
போர்ச்சூழலால் பூர்வீக நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மக்கள் தற்போது மீள்குடியேறியுள்ள நிலையில் அவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. இது குறித்து துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்
என கோரிக்கை விடுத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளர் எஸ்.கோவிந்தராஜா இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய தேர்தல் தொகுதிகளில் கடந்த 1958 முதல் 1977 வரை இந்நாட்டில் நிகழ்ந்த இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களும் தனது தாயக பூமியிலிருந்து இனவாதக் கும்பல்களால் விரட்டியடிக்கப்பட்ட மலையக மக்கள் கூறப்பட்ட தேர்தல்தொகுதிகளில் தமது இன, சமூக, பாதுகாப்புக்காக குடியேறினார்கள். அவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும் வறுமையின் அகோரப்பிடிக்கு மத்தியிலும் காடுகளாக இருந்த நிலத்தை விவசாய நிலங்களாக்கியதுடன் தாங்கள் வாழும் கிராமம், பிரதேசமே தமது தாயக பூமியாக கருதி இன உணர்வு இன பண்பாட்டு விழுமியங்களுடன் இங்கு வழும் பூர்வீக குடிமக்களுடன் தாங்களும் ஒருவர் என்ற நிலையில் எவ்வித பிரதேச இனவாதமில்லாது ஐக்கியமாக வாழுகின்றனர்.
சுமார் நாற்பத்தைந்து வருடகாலமும் மூன்று நான்கு தலைமுறையினையும் கண்டுள்ளனர். ஆனால் அவர்கள் வாழுகின்ற நிலங்கள், விவசாய காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்க சில அரசியல் சக்திகள், ஆளும் ஆண்ட அரசுகள், அரச அதிகாரிகள் மிக காத்திரமாகவும் நாசுக்காகவும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த மக்களது விடாமுயற்சியும் இதயசுத்தியுடன் அரசியல் பணிசெய்யும் அரசியல் வாதிகளின் அனுதாபத்தாலும் இவர்களுக்கு காணி உறுதிகள் இந்த நல்லாட்சியினால் சமீபத்தில் சில கிராமங்களுக்கு சிலருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் காணி உறுதியில்லாதுள்ள வன்னி மாவட்டத்தின் சகல கிராமங்களுக்கும் பாகுபாடின்றி வழங்க வலுவான நடைமுறை கடைப்பிடிக்கவில்லையென்பது புரியாத புதிராக உள்ளது. அதேநேரம் ஆண்ட அரசும் தற்போதைய அரசும் ஏற்படுத்திய திட்டமிட்ட சிங்கள, முஸ்லிம் கிராமங்களுக்கு காலக்கிரமத்தில் உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கிராமங்களுக்கு கொடுத்த முன்னுரிமை காட்டிய கரிசனை மேற்கொண்ட துரித செயற்றிட்டம் தமிழர்கள் வாழுகின்ற கிராமங்களுக்கு மேற்கொள்ளப்படாமை ஒரு திட்டமிட்ட புறக்கணிப்பாகும்.
இன உணர்வோடும் மனிதாபிமான ரீதியில் இந்த விடயத்தை கையாண்டு இத்தால் இந்த காணி உறுதிகள் காலக்கிரமத்தில் தங்களுக்கு கிடைத்திடுமென மக்கள் இன்றும் வேதனைப்படுகின்றனர் என்பது கண்கூடு. வனப்பாதுகாப்பு திணைக்களமே இந்தக்காணி உறுதி வழங்குவதற்கு தடையாக இருக்கின்றது இதற்கான அனுமதி கொடுக்க மறுப்பதாகவும் அரச அதிபர் திணைக்களங்கள், பிரதேச செயலகங்கள் தரப்பில் கூறப்படுகின்றது. எது எவ்வாறாயினும் இம்மக்களுக்கு இந்த காணி உறுதிகள் கடந்த பல வருடங்களாக வழங்காமல் இருப்பது மோசமான மனித உரிமை மீறலாகும். அத்துடன் சுமார் நாற்பது நாற்பத்தைந்து வருடங்கள் இம்மக்கள் வாழுகின்ற காணிகளுக்கு உரித்துகள் என்பது ஒரு சட்டபூர்வ ஆவணம் இதை காலக்கிரமத்தில் வழங்குவது அரசின் கடமையாகும்.
ஆகவே, இந்த விடயத்தில் தங்களின் மேலான கவனத்தை மேற்கொணடு சில கிராமங்களுக்கு இக்காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளது போல வழங்கப்படாமல் உள்ள கிராமங்களுக்கு இந்த உறுதிகள் வழங்க துரித நடவடிக்கை எடுத்து பல வருடங்கள் தீர்க்கப்படாமல் இருக்கின்ற இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட திணைக்கள உயர் மட்டத்தில் பரிசீலனை மேற்கொண்டு வழங்கப்படாதமைக்கான காரணத்தை கண்டறிந்து சாதக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம் என்றுள்ளது.
இக்கடித பிரதிகள் இ.தொ.கா.வின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம், இ.தொ.கா. பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.