எத்தகைய சவால்கள் நேர்ந்தாலும் சம்பூர் மக்களை சொந்த காணியில் குடியேற்றுவோம் - சம்பந்தன்
சம்பூர் மீள்குடியேற்றத்துக்கு எத்தகைய சவால்கள் வந்தாலும் தடைகள் நேர்ந்தாலும் அந்த மக்களை அவர்களின் சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றியே தீருவோம் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதி மன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளை துப்புரவு செய்தவர்களும் தற்காலிக கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியிருந்தவர்களும் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டமை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
சம்பூர் வர்த்தக வலயம் சார்பில் உச்ச நீதிமன்றம் வழக்கொன்று இருப்பதன் காரணமாக தமது காணிகளை துப்புரவு செய்யச்சென்ற மக்களை பொலிஸார் தடுத்திருக்கலாம். வெளியார் நுழைவதை தடுக்கும் வகையில் பொலிஸார் கடமையை செய்திருக்கலாம். சம்பூர் வர்த்தக வலயம் சம்பந்தமாக வழக்கொன்று தாக்கல் செய்திருக்கின்ற காரணத்தினால் அவ்வழக்குக்கான தீர்வு எவ்வாறாயினும் வந்துதான் ஆக வேண்டும்.
சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக தற்போதைய அரசாங்கத்தினால் பாரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. அமைச்சரவையில் சம்பூர் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம் சம்பூர் மீள்குடியேற்றம் சம்பந்தமாக தீவிரமான முடிவுகளை மேற்கொண்டு அதை அமுல்படுத்த முன்வந்துள்ளது. அதனால் சம்பூர் மீள்குடியேற்றத்தை விரைவில் செய்து முடிக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அந்த விவகாரத்தை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கட்டாயம் செய்விக்கும். அது நடந்தே தீரும். எக்காரணம் கொண்டும் எமது முயற்சி தோல்வியுற நாம் விடப்போவதுமில்லை. விடவும் மாட்டோம். இவ்விவகாரம் தொடர்பாக சம்பூர் மக்களோ ஏனையவர்களோ சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.
சம்பூர் மக்கள் தமது காணியில் குடியேறுவார்கள். வர்த்தக வலயக்காணியில் மக்கள் குடியேற்றப்படுவதை தொடர்ந்து கடற்படை முகாமாகவுள்ள 237 ஏக்கர் காணியிலும் மக்கள் விரைவாக குடியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.