லண்டன் பேச்சுக்கள் குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அறிந்திருக்கவில்லை - சுரேஷ் எம்.பி.
உலகத்தமிழர் பேரவை, அரசாங்கத்தின் பிரதிநிதிகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்றலுடன் இடம்பெற்ற லண்டன் உயர் மட்டச் சந்திப்பு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் அறிந்திருக்கவில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் இனிஷியேட்டிவ் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பு குறித்து அவர் விடுத்துள்ள ஊடக குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
பிரித்தானியாவின் லண்டன் நகரில் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், இல ங்கை வெளிவிவகார அமைச்சர், முன்னாள் சமாதானத்தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தென்னாபிரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகள், சுவிஸ் நாட்டின் பிரதிநிதி உட்பட பல்வேறு பிரதிநிதிகளின் பங்கேற்புடன் உயர் மட்ட சந்திப்பு நடைபெற்றிருந்தது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே இச்சந்திப்பு தொடர் பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளாக இருக்கும் எமக்கு எந்தவிதமான அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. ஆகவே இச்சந்திப்பு குறித்து வெளியிடப்ப டும் கருத்துக்கள், முடிவுகளை கூட்டமைப் பின் சார்பாக ஏற்றுக்கொள்ளமுடியாது.
மேலும் இக்கூட்டத்தில் வடகிழக்கில் காணப்படும் தமிழ் மக்களின் உடனடிப்பிர ச்சினைகள், பொதுத்தேர்தல் தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகின்றது. உண்மையிலேயே வடகிழக்கு மாகாணங்களில் களத்திலிருந்து பணியாற்றும் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் காணப்படுகின்றார்கள். அவர்கள் இவ்விடயத்துடன் நேரடியாக தொடர்புடையவர்கள்.
அவர்களிடம் இவ்விடயங்கள் தொடர்பாக ஆராயப்படாது இவ்வாறான சந்திப்புக்களை மேற்கொள்வதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும், உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாம் அனைவரும் செயற்படுகின்றோம். அவ்வா றிருக்கையில் அவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள சந்திப்பொன்றை ஏனைய தரப்புக்களிடமிருந்து மறைக்கவேண்டியதன் காரணம் என்ன?
அடுத்து பொதுத்தேர்தல் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகின்றது. பொதுத்தேர் தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனேயே பேசவேண்டும். அதனை விடுத்து சர்வதேச தரப்புக்களுடன் அது தொடர்பில் பேசுவ தால் என்ன நன்மை ஏற்படப்போகின்றது என்பதை உரியவர்கள் தெளிவுபடுத்துவது சாலப்பொருத்தமானது.
மேலும் இதுவொரு ரகசியச் சந்திப்பாக வும் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் கூட்டமைப்பின் சார்பில் பிரதிநிதியொருவர் பங் கேற்பது குறித்து பங்காளிக் கட்சித்தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அதில் பேசப்படும் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான எந்தவொரு செயற்பாடுகளும் நடைபெற வில்லை. அவ்வாறிருக்கையில் அச்சந்திப் பின் தீர்மானங்களும், அங்கு முன்வைக்கப் படும் முன்மொழிவுகளும் கூட்டமைப்பு சார்ந்ததாக ஏற்கமுடியாது.
முன்னதாக சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் இவ்வாறானதொரு சந்திப்பு நடைபெற்றிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது லண்டனில் இடம்பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக துபாயில் இடம்பெற வுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் இச்சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பாதுகாத்து ஐ.நா. மனித உரிமை அறிக்கையை பலவீனப்படுத்தும் வகையில் செல் கின்றதா என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே அச் சந்திப்பு குறித்து கூட்டமைப்பு பங்கா ளிக்கட்சிகளுக்கு தலைவர் சம்பந்தன் உரிய தெளிவு படுத்தல்களை வழங்கவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றுள்ளது.