Breaking News

வடக்கில் சமூகவிரோதக் குழுக்களுக்கு பொலிஸார் துணைபோகின்றனர்! மாவை குற்றச்சாட்டு

பொலிஸார் தமது கடமைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திருந்தால் வித்தியா போன்றவர்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார் துணைபோவதாலேயே யாழ்ப்ப ணத்தில் மிகமோசமான சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. என தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

 தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் நல்லூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 13 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள அலுவலகத்தில் நினைவுகூரப்பட்டது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார. அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: யாழ்ப்பாணத்தில் இன்று போதைப்பாவனை, வன்முறைகள், வன்புணர்வுகள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை எற்றுக் கொள்ளமுடியாது. 

இவை எமது போராட்டத்தை மழுங்கடிக்கும் - கொச்சைப்படுத்தும் செயற்பாடகவே மேற்கொள்ளப்படுகின்றன. இது ஒரு இலட்சியமற்ற - நம் விடுதலைக்கு விரோதமான - விடுதலையை அழித்து விடுவதான - எமது பாரம்பரியங்களை அழித்துவிடுகின்ற வன்முறைச் சம்பவங்களாகவே காணப்படுகின்றன. பொலிஸார் இம்மண்ணில் தமது கடமைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திருந்தால் வித்தியா போன்றவர்களின் படு கொலைகளை தடுத்து நிறுத்தியிருக்கலாம். இத்தகைய படுபாதகக் குழுக்கள் செயற்படுவதற்கும்,

 சுதந்திரமாக இயங்குவதற்கும் யாழ்ப்பாணத்தில் சூழல் இருக்கிறது என்றால் இவ்வாறான பாதாள குழுக்களுக்கு பொலிஸார் துணைபோகின்றனரா என்ற சந்தேகம் தவிர்க்கமுடியாததாகிறது. போதைபொருள்களுக்கு எதிராக, வன்முறைகளுக்கு எதிராக, வன்புணர்ச்சிக்கு எதிராக போராடுபவர்களை நசுக்கவே பொலிஸார் முற்படுகின்றனர். இதன் பின்னால் போராட்டத்திறக்கு எதிரான சக்திகள் பல உள்ளன என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

இத்தகைய விடயத்தில் எம்மவர்கள் அனைவரும் கவனம் எடுக்க வேண்டும். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அண்மையில் இத்தகைய போதைவஸ்து விற்பனை செய்யும் இடங்கள், பாலியல் வன்ர்புணர்வாளர்கள் கூடும் இடங்கள் என 28 இடங்களை அடையாளப்படுத்தியுள்ளார். இதுகுறித்து நாம் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.- என்றார்.