அரசாங்கத்தின் உள்ளக விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவி வழங்கும்!
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான செயன்முறைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு நிதி உதவி வழங்கவுள்ளது. இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் சுபினாய் நன்டி தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு தொழில்நுட்பசார் ஆலோசனைகளை வழங்கும் நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபை இந்த உதவியை செய்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியனவற்றின் ஊடாக நிலையான சமாதானத்தை நிலைநாட்ட முடியும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைக் காரியாலயம், வெளிவிவகார அமைச்சின் ஊடாக நல்லிணக்க முனைப்புக்களுக்கு பங்களிப்பு வழங்கிவருகின்றது.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான செயன்முறைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு நிதி உதவி வழங்கவுள்ளது. முதல் கட்டமாக இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க உள்ளது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியனவற்றுக்கு இந்த நிதி வழங்கப்பட உள் ளது.
குறிப்பாக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு தொழில்நுட்பம்சார் ஆலோசனைகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றது. அத்துடன் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க, சமூக சகவாழ்வு என்பனவற்றுக்கும் உதவிகளை வழங்குவோம்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு சர்வதேச தரத்தில் உதவிகள் வழங்கப்பட உள்ளன. இலங்கையுடன் நெருங்கிச் செயற்பட்டு வருகின்றோம். இலங்கைக்கு பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கத் தயாராகவும் இருக்கினறோம். மேலும் நாட்டின் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதாகும் என்றார்.
2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும். நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதுடன் நீண்டகாலம் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நல்லிணக்கத்தை அடைவதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளதுடன் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டமை முக்கிய விடயமாக கருதப்படலாம். மேலும் காணிகள் விடுவிக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்துள்ளமையும் முக்கிய விடயமாகும்.