எங்கள் காணிகளை மீட்டுத்தாருங்கள்! பரவிப்பாஞ்சான் பிரதேச மக்கள் கோரிக்கை
யுத்தத்தின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதி வெடிபொருட்கள் அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால் இப்பகுதியில் மீள்குடியமர்வுக்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருப்பதால் இதுவரை மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தில் உள்ள தமது வாழ்விடங்களை மீட்டுத்தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரிநிலையத்தில் இருந்த தங்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதாக கூறி கடந்த 2010ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அழைத்து வந்து பாடசாலை நலன்புரி நிலையத்தில் தங்க வைத்திருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்கள் கருதி பரவிப்பாஞ்சான் மீள்குடியமர்வு ஒரு மாதத்தின் பின்னர் அனுமதிக்கப்படும் என்றும் அதுவரை இந்த பகுதி மக்களை தற்காலிக இடங்களில் தங்கியிருக்குமாறும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த கிராம மக்கள் தற்காலிக இடங்களில் தங்கியிருந்தனர்.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இக்கிராம மக்கள் தற்காலிகமாகவே உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர் என்றும் குறிப்பாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகையினை முற்பணமாகவும் மாதாந்தம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொகையினை மாதாந்த வாடகையாகவும் செலுத்தியே ஐந்து ஆண்டுகளாக தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ள இப்பகுதி மக்கள் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீக நிலத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பரவிப்பாஞ்சான் கிராமத்தினைச் சேர்ந்த சுமார் 52 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு கடந்த ஐந்து வருடங்களாக சொந்த இடங்களில் வாழமுடியாத நிலையில் காணப்படுகின்றன. தமது சொந்தக்காணிகளை பெற்றுத்தருமாறு கோரி முன்னைய அரசாங்கத்திலும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னரும் இவ்வாறு பல தடவைகள் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.