பின்கதவால் அரசியலுக்கு வந்தவர்கள் எனக்கெதிராக செயற்பட முடியுமா? ரணில் கேள்வி
நான் அரசியலுக்கு பின் கதவினாலன்றி முன்கதவூடாகவே வந்தேன். எனினும் நிரந்தர கொள்கையில்லாது பின்கதவூடாக அரசியலுக்கு வந்தவர்கள் எனக்கு எதிராக எவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பினார்.
பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டியிட நான் தயாராக உள் ளேன். என்னை தோற்கடிப்பதற்கு தற்போது பிரபாகரனும் இல்லை விடுதலைப் புலிகளும் இல்லை. மேலும் வடக்கு மக்களின் வாக்கு மூலம் மாத்திரமின்றி தென் பகுதி மக்களின் வாக்குகளுடனும் ஆட்சிபீடமேறி காட்டுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தென்மாகாண அமைச்சர் உபுல் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது.இவரது கருத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மன்னிப்பு கோர வேண்டு்ம் என்றும் அவர் கூறினார்.நிகவரட்டியவில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலின் போது மக்களிடம் முன்வைத்த 100 நாள் வேலைத்திட்டத்தின் அனைத்து வாக்குறுதிகளையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். இம்முறை தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் பல்வேறு சலுகைகளை நாம் வழங்கினோம். தற்போது மக்களின் கைகளில் பணம் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் வர்த்தக துறை தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.
இந்நிலையில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது எமது பாரிய வெற்றியாகும். எனினும் இதன்போது எதிர்க்கட்சியினர் காலைவார முயன்றனர்.
அதேபோன்று 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னர் 20 ஆவது திருத்ததையும் நிறைவேற்றவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரினார். விசேடமாக இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே முன்னின்று செயற்ப்பட்டது. ஜனாதிபதியின் கோரிக்கையின் பிரகாரமே இதற்கு நாம் இணக்கம் தெரிவித்தோம்.
தேர்தல் முறைமைக்கு அனைத்துக்கட்சிகளின் ஆதரவினை பெறவேண்டியுள்ளது. எனினும் அது இலகுவான காரியமல்ல.
நம்பிக்கையில்லா பிரேரணை
இதேவேளை தற்போது எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து என்னை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்பு ஆட்சி மாற்றமொன்றை செய்யபோவதாக பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, ஜீ.எல் பீரிஸ், பந்துல குணவர்தன ,டலஸ் அழகப்பெரும ஆகியோர் சூளுரைத்துள்ளனர்.
இது தொடர்பில் தெளிவாக ஒன்றை கூற விரும்புகிறேன். நான் அரசியலுக்கு பின் கதவால் வரவில்லை. மாறாக முன்கதவினூடாகவே தான் வருகை தந்தேன். அதேபோன்று நான் அரசியலிருந்து ஓய்வெடுக்கும் போதும் முன்கதவூடாகவே செல்வேன்.
எனினும்பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, ஜீ.எல் பீரிஸ், பந்துல குணவர்தன ,டலஸ் அழகப்பெரும ஆகியோர் நிரந்தர கொள்கையில்லாமல் பின் கதவூடாக அரசியலுக்கு வந்தவர்கள். ஆட்சி மாறும் போதும் இவர்களது கதவுகளும் மாறும்.
எனவே பின் கதவூடாக அரசியலுக்கு வந்தோர் எனக்கு எதிராக எவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியும்?. திருடர்களுக்கு எமது நாட்டு மக்கள் மேலும் இடமளிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அத்துடன் தென் மாகாண அமைச்சர் உபுல் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது.இவரது கருத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மன்னிப்பு கோர வேண்டு்ம்.
இனிமேலும் இந்த பாராளுமன்றத்தை கொண்டு செல்ல முடியாது . .இதனால் பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரவுள்ளோம். இந்நிலையில் அடுத்த பொதுத்தேர்லில் மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டியிட நான் முழுமையாக தயார் நிலையில் உள்ளேன். முன்னாள் ஜனாதிபதி 2005 ஆம் ஆண்டு பிரபாகரனிற்கு இலஞ்சம் வழங்கி அந்த தேர்தலில் என்னை வெற்றிக்கொன்டார்.
எனினும் இம்முறை மஹிந்தவினால் என்னை தோற்கடிப்பதற்கு தற்போது பிரபாகரனும் இல்லை. விடுதலை புலிகளும் இல்லை. இம்முறை தேர்தலின் போது வடக்கு மக்களின் வாக்குகளினால் மாத்திரமின்றி தென் பகுதி மக்களின் பெரும்பான்மை வாக்குகளுடனும் ஆட்சிபீடமேறுவேன். இந்த தேர்தலின் பின்னர் முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றுவோம்.