லண்டன் இரகசியப் பேச்சுக்களின் மர்மம் விலகியது
இலங்கை அரசாங்க, தமிழர் பிரதிநிதிகள், அனைத்துலக சமூகப் பிரதிநிதிகளுக்கு இடையில் பிரித்தானியாவில் நடைபெறும் பேச்சுக்களில், போர்க்குற்ற விசாரணை குறித்தோ, அரசியல்தீர்வு குறித்தோ விவாதிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நேற்று ஆரம்பமாகிய இந்தச் சந்திப்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிரதிநிதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன், நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான முன்னாள் பிரதி அமைச்சர் இப்ராகிம் இப்ராகிம், இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முன்னாள் சமாதானத்திற்கான ஆலோசகர் மார்டீன் சுஷேஞர்,உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த இரகசிய கலந்துரையாடல் தொடர்பாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் சந்திப்பின் நோக்கங்கள் தொடர்பாக விபரித்துள்ளார்.
அதில் அவர், “விரைவில் நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும், வடக்கு, கிழக்குத் தமிழர்களின் உடனடித் தேவைகள் குறித்தும் ஆராயவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. நேற்று ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் இன்று வரை தொடர்ந்து இடம்பெறும். இரகசியமான சந்திப்பாகவே இது ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும் இதுபற்றிய தகவல்கள் தவறான முறையில் வெளியாகியுள்ளன.
இந்தக் கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து இரகசிய ஆலோசனைகள் நடத்தப்படுவதாக சிலர் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் நிறைவேற்றப்பட வேண்டிய தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் குறித்தே நாம் ஆராய்கிறோம்.
இதுகுறித்து ஏற்கனவே சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றுவது குறித்தும் கலந்துரையாடப்படும். இலங்கையின் எந்த அரசாங்கமானாலும், எமது பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் அனைத்துலக அழுத்தம் தேவைப்படுகிறது. அத்துடன் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதியுதவிகள் அனைத்துலக சமூகத்திடம் இருந்தே கிடைக்க வேண்டும்.அதன் காரணமாகவே அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் புலம் பெயர் தமிழர்களும், உடனடித் தேவைகளை நிறைவேற்றும் விடயத்தில் விருப்பம் வெளியிட்டுள்ளனர். அவர்களும் இதில் பங்கேற்கின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இந்தப் பேச்சுக்களின் அடுத்த கட்டம் டுபாயில் நடக்கவுள்ளதாக, உலகத் தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.