Breaking News

சுற்றாடல் மாசடைவதை தடுப்போம் - இன்று உலக சுற்றாடல் தினம்

உலக சுற்றாடல் தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவையில் நடைபெறவுள்ளது. 

பொலன்னறுவை மெதிரிகிரிய ‘வடதாயெக’ விஹாரை முன்றலில் நடைபெறும் இந்த உலக சுற்றாடல் தின நிகழ்வில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 

ஐக்கிய நாடுகள் சூழல் அமைப்பு 1972ஆம் ஆண்டு ஸ்டெலக்ஹோம் நகரில் நடத்திய சூழல் மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய உலக சூழல் தினம் பெயரிடப்பட்டது. 

அதன்படி பல்வேறு சூழல் பிரச்சினைகள் தொடர்பாக உலக மக்களின் கவனத்தை ஈர்த்தல் மற்றும் அறிவூட்டும் நோக்கத்துடன் வருடா வருடம் இந்த தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. துரிதமாக அதிகரித்து வரும் உலக சனத்தொகை காரணமாக இயற்கை வளநுகர்வு அதிகரித்து வருகின்றது. 

வரையறுக்கப்பட்ட வளங்கள் அதிகமாக நுகரப்படுவதனால் எதிர்காலத்தில் மிக விரைவில் மனிதனுக்கு பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். வளங்களை சிக்கனமாக பயன்படுத்தல், வீண்விரயங்களை தடுத்தல் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்பதுதான் இவ்வருடத்துக்கான சூழல் தின தொனிப்பொருளாகும்