சரிந்தது - சன் டி.வி.யின் பங்குகள்
சன் குழுமத்தின் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்புக்கான உரிமம் இரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளமையினால் அதன் பங்குகள் பலத்த சரிவை எதிர்கொண்டுள்ளன. பங்குச் சந்தை வர்த்தகத்தில் நேற்று சன் டி.வி.யின் பங்குகள் 28% சரிவை சந்தித்துள்ளன.
சன் டி.வி. குழுமம் தனது 33 தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஒளிபரப்பு உரிமையை மேலும் 10 ஆண்டுகள் நீடிப்பதற்காக மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. பொதுவாக தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்கு உள்துறை அமைச்சகத்தின் 'பாதுகாப்பு அனுமதி' சான்றிதழ் கட்டாயம் தேவை. ஆனால் சன் டி.வி. நிறுவனத்தின் அதிபர் கலாநிதி மாறன், அவரது சகோதரரான முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த வழக்கும், சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கும் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டி உள்துறை அமைச்சகம் அந்த"பாதுகாப்பு அனுமதி" சான்றிதழை வழங்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் உள்துறை அமைச்சகம் விளக்க அறிக்கையை அனுப்பியுள்ளது.
இதனால் சன் டி.வி. குழுமத்தின் 33 அலைவரிசைகளின் உரிமங்கள் இரத்தாகி ஒளிபரப்பு நிறுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இது இன்றைய பங்குச் சந்தைகளின் வர்த்தகத்திலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையில் சன் டி.வியின் பங்குகள் சுமார் 28% வரை சரிவை சந்தித்தன. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டியில் 26% சரிவை எதிர்கொண்டிருந்தது. நேற்று முற்பகல் 11 மணியளவில் மும்பை பங்குச் சந்தையில் சன் டி.வி. பங்கு விலை மதிப்பானது ரூ.320-இல் இருந்து ரூ.258 ஆக சரிந்திருந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியில் சன் டி.வி பங்கு விலை மதிப்பானது ரூ.356இல் இருந்து காலையில் வர்த்தகத்தின் தொடக்கத்தில் ரூ.320ஆகவும் பின்னர் ரூ265 ஆகவும் சரிவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.