சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி! இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க முயற்சி
இளைய தலைமுறையினரிடம் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்க உதவும் வகையில் சிங்கப்பூர் அரசின் புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற 14வது தமிழ் இணைய மாநாட்டில் "அரும்பு" என்ற புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர் சார்பில் 150 பிரதிநிதிகளும், 10 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 200 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அரும்பு செயலியை அந்நாட்டின் பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் வெளியிட்டார்.
"அரும்பு" செயலியானது சிறு குழந்தைகளிடம் தமிழ் மீதான ஆர்வத்தை உருவாக்கவும், அவர்கள் வேடிக்கையான முறையிலும், அதேசமயம் எளிதாகவும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றி அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறும் போது "இன்று பல மொழிகள் அழியும் தருவாயில் இருக்கின்றன. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நம்முடைய மொழியை இழக்க நேரிடும்” என கூறினார்.
மொழி என்பது வெறும் கருத்துகளை / உணர்வுகளை பரிமாறிக்கொள்ள பயன்படும் ஒரு கருவி மட்டுமே என்று சொல்வதை விட பெரிய முட்டாள் தனம் இருக்க முடியாது.
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும். ஒரு இனத்தின் மொழி அழிக்கப்படும் போது அவர்களின் வரலாறும் சேர்ந்தே அழிந்து போகும். இதன் மூலம் அந்த இனம் தன் சுய அடையாளத்தையும், தன்னம்பிக்கையும் இழந்து வேரற்ற மரம் போலாகிவிடும். வேரற்ற மரத்தை யாரும் வெட்டி சாய்க்க வேண்டியது இல்லை, அது தானாகவே மடிந்து போகும்.
ஒரு மொழி உயிர்ப்புடன் இருக்க வேண்டுமானால் அது நம்முடைய நடைமுறை வாழ்வில் எழுத்து மற்றும் பேச்சு வழக்கில் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டியது மிக முக்கியம். ஆனால் நாம் பழம்பெருமை பேசுவதற்கு மட்டுமே தமிழை பயன்படுத்தி வருகிறோம்.
மேலும் தமிழ், தமிழர்கள் என்றும் வாய் கிழிய பேசும் தமிழ் நாட்டில் தான் தமிழை அழிக்கும் முயற்சிகள் வேகமாக நடந்து வருகின்றன. அரசு பள்ளிகளில் கூட ஆங்கில வழி கல்வியை அறிமுகப்படுத்தி வருகிறது நமது மாநில அரசு. எனவே "அரும்பு" போன்ற செயலியானது சிங்கப்பூரை விட தமிழ் நாட்டிற்குதான் அவசரமாக தேவைப்படுகிறது.
"அரும்பு" செயலியானது ஆப்பிள், ஆன்டிராய்டு போன்ற அனைத்து வகை ஸ்மார்ட் போன்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.