Breaking News

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை சாட்சியப்படுத்த புதிய செயலி அறிமுகம்

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் வசதியாக கைத்தொலைபேசி செயலி ஒன்று (mobile phone app) நேற்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சட்ட தரவுகள் நிறுவனங்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள், மனித உரிமை ஆர்வலர்களின் துணையுடன், அனைத்துலக சட்டவாளர் சங்கம் இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒளிப்படங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள், போன்றவற்றை அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பாக சேமிப்பகம் ஒன்றில் சேகரித்து வைக்க முடியும்.

அவற்றை ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் இந்த ஆதாரங்களை சட்டவல்லுனர்கள் குழுவொன்று ஆராய்ந்து, மதிப்பீடு செய்யும். கொடூரங்களை நேரில் கண்ட சாட்சிகள் (eyeWitness to Atrocities) என்ற பெயரில் இந்த செயலி அழைக்கப்படும்.

இந்த செயலியின் மூலம் எடுக்கப்படும் படங்கள் தெளிவானவையாகவும், தன்னியக்க முறையில் முத்திரையை பதியும் வகையிலும் இருக்கும். அத்துடன் புவிநிலைகாட்டி நேரம், அமைவிடத் தரவுகளையும் அந்தப் படங்கள் கொண்டிருக்கும்.

உலகில் நடக்கும் போர்க்குற்றங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணங்களை சட்டரீதியாக செல்லுபடியானதாக பதிவு செய்யும் நோக்கிலேயே இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பல போர்க்குற்றங்கள் தொடர்பாக கைத்தொலைபேசிகளின் மூலம் எடுக்கப்பட்ட காணொளிகள் வெளியாகியிருந்தன. எனினும் அவற்றை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.

ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி மூலம், திரட்டப்படும் போர்க்குற்ற, மனித உரிமை மீறல் ஆதாரங்கள் மறுக்க முடியாதவையாகவும், சட்டரீதியாக நீரூபிக்கத்தக்க வகையிலும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.