பிரபாகரனின் கைத்துப்பாக்கியை மீட்கவில்லையாம்! இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவரது சடலத்துடன் இலங்கை படையினரால் மீட்கப்படவில்லை என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய தனிப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் அவரது அடையாள இலக்கத் தகடு உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்கள் காணாமற் போயுள்ளதாகவும், அவை எங்குள்ளன என்று தெரியாமல் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர், “பிரபாகரனின் கைத்துப்பாக்கி காணாமல்போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து எமக்கு எதுவும் தெரியாது. இந்தச் செய்தியை வெளியிட்டவர்களிடம் தான் இதுபற்றி கேட்கவேண்டும். எம்மிடம் இதுபற்றிய தகவல்கள் பதிவாகவில்லை.
பிரபாகரன் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரது சடலத்தில் கைத்துப்பாக்கி இருக்கவில்லை. அது மீட்கப்படவுமில்லை. மீட்கப்பட்டதாக எம்மிடம் தகவல் பதிவாகவுமில்லை. இருப்பினும், இலக்கத்தகடு குறித்து நான் சற்று ஆராய்ந்து கூறவேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், ஜி-லொக்-17 ரக 9 மி.மீ கைத்துப்பாக்கியை தனது தனிப்பட்ட ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தார்.
அத்துடன், கைக்குண்டு ஏவக்கூடிய, எம்-16 ஏ-2 துப்பாக்கியையும் அவர் அதிகம் பயன்படுத்தியிருந்தார். இவை மற்றும் பிரபாகரனின் அடையாளத் தகடு உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களின் நிலையே தெரியாதுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.