விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இன்னமும் நிதியுதவி வழங்கப்படுகின்றது : அமெரிக்கா
விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகளும் அதன் நிதி ஆதரவும் இன்னும் தொய்வடையவில்லை என்று தீவிரவாதம் குறித்த அமெரிக்காவின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உலக நாடுகளின் பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் 2014 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையில் எந்த தீவிரவாத தாக்குதலும் நடக்கவில்லை. எனினும், இலங்கை அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக 13 விடுதலைப்புலிகள் 2014இல் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சிலர் இந்தியாவில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் தூதரக அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக 16 அமைப்புகள் செயல்படுவதையும், அந்த அமைப்பின் தீவிரவாத திட்டங்களுக்காக 422 பேர் நிதி உதவி செய்து இருப்பதை கண்டறிந்து இருப்பதாக இலங்கை அரசு அறிவித்து இருப்பதாகவும், 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிப்பட்டு விட்டாலும் கூட சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளின் ஒருங்கிணைப்பு தொடர்பு உள்ளதாகவும், அந்த இயக்கத்துக்கு நிதி உதவி அளிப்பதும் இன்னும் உள்ளது எனவும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.