மஹிந்த மீண்டும் வந்தால் பழிவாங்கும் படலம் தொடரும் - ஜே.வி.பி. அறிவிப்பு
மஹிந்த கூட்டணியின் இனவாத பிரசாரங்களின் மூலமாக மஹிந்த மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றார். மஹிந்த மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் பலர் பழிவாங்கப்படுவார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை ஆதரிப்பது தொடர் பில் நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என வும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியால் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், தேசிய அரசாங்கம் அமையப்பெற்று ஐந்து
மாதங்களை கடந்தும் இந்த அரசாங்கத்தில் மக்களுக்கான எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில் அழகான கதைகளை கூறி மக்களை ஏமாற்றிவிட்டனர். இந்த அரசாங்கத்தில் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதைவிடவும் வேறு எந்த நல்ல செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பில் நாம் ஆரம்பத்தில் தலையிடவும் அரசாங்கம் சற்று முக்கியத்துவம் கொடுத்து ஊழல் தொடர் பில் கவனத்தை திருப்பியது. " அரசாங்கம் இனிமேல் ஊழலுக்கு எதிராக
செயற்படும் என்று நாம் ஒதுங்கிக்கொண்டோம். ஆனால் மீண்டும் அரசாங்கம் அமைதியாகிவிட்டது. கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்கள் மோசடிகள் அனைத்தும் இந்த ஆட்சியிலும் இடம்பெற ஆரம்பித்து விட்டன.
அதேபோல் இந்தப் பாராளுமன்றத்தின் ஊடாக மக்களுக்கான எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாதுள்ளது. பாராளுமன்றம் மீண்டும் அராஜகக்காரர்களின் மன்றமாக மாறிவிட்டது. மக்கள் வரம் இல்லாத அரசாங்கம், மக்களின் தெரிவில் அமையாத அமைச்சரவை என அனைத்துமே மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே அமைந்துள்ளன. ஒரு பக்கம் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியினர் முயற்சிக்கும் அதேவேளை மறுபுறம் மஹிந்த கூட்டணி பாராளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படுகின்றது.
19ஆவது திருத்தக் சட்டம் கொண்டு வந்த போது இவர்கள் நடந்துகொண்ட விதத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம். மக்களின் வரப்பிரசாதத்தில் பாராளுமன்றத்துக்கு வரும் இவர்கள் இங்கு மக்களை அழிக்கும் செயற்பாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அரசாங்கமோ மக்களுக்காக குரல்கொடுக்கும் எதிர்க்கட்சியோ இன்று பாராளுமன்றத்தில் இல்லை.
இதேவேளை ஆட்சியை கவிழ்த்து மீண்டும் சர்வாதிகார ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற கனவில் மஹிந்த செயற்பட்டு வருகின்றார். அவரை சுற்றியுள்ள ஆதரவுக் குழுவின் உதவியுடன் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
அதேபோல் முழுமையாக பழிவாங்கும் அரசியல் பிரசாரத்தையே மஹிந்த கூட்டணி மேற்கொண்டு வருகின்றது. இந் நிலையில் மஹிந்த அரசாங்கம் மீண்டும் அமையுமானால் நாட்டில் பழிவாங்கல் செயற்பாடுகள் தலை தூக்கும். இன்று அரசியலில் மிகவும் கடுமையான வார்த்தை பிரயோகங்களால் மஹிந்த கூட்டணி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வரும் சந்தர்ப்பத்தில் பலர் பழிவாங்கப்படுவார்கள். அதற்கு இனி ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது.
மேலும் இத்தனை காலமாக இலங்கையில் பிரதான இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி நடத்தி வந்தன. இந்த இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் மக்களுக்கான எந்தவொரு நலன்சார் விடயங்களும் நடைபெறவில்லை. தாம் அதிகாரத்தில் இருப்பதை மட்டுமே கவனத்தில் கொண்டனர். அதேபோல் இப்போது அமைந்திருக்கும் தேசிய அரசாங்கத்தில் பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் ஆட்சி அமைத்து ஐந்து மாத காலத்தில் மக்களின் வெறுப்பினை சம்பாதித்துள்ளனர்.
எனவே இவ்விரு கட்சிகளின் தனி ஆட்சியையோ அல்லது கூட்டு ஆட்சியையோ மக்கள் ஆதரிக்கவில்லை. இனிமேல் நாட்டில் மூன்றாவது கொள்கையுடைய கட்சியின் ஆதிக்கம் தேவைப்படுகின்றது. அதை ஏற்படுத்த மக்கள் விடுதலை முன்னணி தயாராகிவருகின்றது. மக்களும் இன்று எமது கொள்கையையும் செயற்பாடுகளையும் ஆதரிக்க முன்வருகின்றனர். அதை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றோம் என்றார்.
கேள்வி;- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்தால் ஜே.வி.பி ஆதரிக்குமா ?
கடந்த காலத்தில் எதிர்க்கட்சியால் நம்பிக்கை இல்லா பிரேரணைகளை கொண்டுவருவதாக தெரிவித்தும் இன்றுவரை ஒன்றையேனும் இவர்கள் நிறைவேற்றாதுள்ளனர். அரசியல் பழிவாங்கலுக்காக ஒருசிலர் சவால் விடுவதை நாம் பெரிதுபடுத்தவும் இல்லை. பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்தால் அந்த சந்தர்ப்பத்தில் அதை ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்போம். இப்போது எந்த தீர்மானமும் இல்லை.