Breaking News

சீனாவின் தாமரைக் கோபுரம்! தெற்காசியாவுக்குப் பாரிய அச்சுறுத்தல்

இந்தியப் பெருங்கடல் பகுதியை, அமைதி பிராந்தியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று, இந்தியா மட்டுமல்ல; இப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் கருத்து. ஆனால், சர்வதேச பாதுகாப்பு ரீதியில் இந்தியப் பெருங்கடல், தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, வல்லரசு நாடுகள் முயன்று வருவதோடு, அதற்காகவே போட்டி போட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகின்றன.

இந்த வகையில், சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் ஏற்பட்டுள்ள அண்மைக்காலப் போட்டிகள், இந்தியா, மொரீஷியஸ், மாலத்தீவு உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகளை கவலையடையச் செய்து உள்ளது. அதேநேரத்தில், இலங்கை அரசு, சீனாவிற்கு அளித்து வரும் முக்கியத்துவம், எதிர்காலத்தில் போர்மேகத்தை உருவாக்குவதாக உள்ளது.

டீக்கோ கார்சியா:

அமெரிக்காவிற்கு சொந்தமான டீக்கோ கார்சியா, இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில், நிலநடுக் கோட்டிற்கு தெற்கே அமைந்துள்ள ஒரு பவளபாறைத் தீவு. இது இங்கிலாந்திற்கு சொந்தமானது. 1814ம் ஆண்டில், இங்கிலாந்து இத்தீவு மீது உரிமை கோரியது. பின், 1965ம் ஆண்டில், இத்தீவை இங்கிலாந்திடமிருந்து, அமெரிக்கா குத்தகைக்கு வாங்கி, அதில், அமெரிக்காவின் கடற்படை மற்றும் விமானப் படைக்கு தளங்கள் அமைத்து, இத்தீவை ராணுவ மயமாக்கியது. டீக்கோ கார்சியா, இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியிலிருந்து தென்மேற்கே, 1,796 கி.மீ., துாரத்திலும், ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையில் இருந்து, 4,723 கி.மீ., துாரத்திலும், தான்சானியா கரையின் கிழக்கே, 3,535 கி.மீ., துாரத்திலும், அமைந்து உள்ளது.

டீக்கோ கார்சியாவில் ஐக்கிய அமெரிக்கக் கடற்படை, தன் தேவைக்கான உதவி தளத்தை, இங்கு அமைத்துள்ளது. பெரும் கடற்படைக் கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உதவித் தளம், படைத்துறைத் தேவைக்கான விமானப் படைத் தளம், தகவல் தொடர்பு, விண்வெளித் தொடர்புத் தளம் ஆகியவை இங்கு உள்ளன. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ., இங்கு அந்நிய நாடுகளை உளவு பார்க்கும் நவீன மையத்தை வைத்துள்ளது.

சீனாவுக்கு வியர்வை:

இதனால், இத்தீவிற்கு அருகே உள்ள இலங்கையை, தன் கட்டுப்பாட்டில் வைக்க, சீனா ரகசிய திட்டம் தயாரித்து, அதற்காக, ஏராளமான பணம் ஒதுக்கி, இலங்கையில் அம்பாந்தோட்டையில் பிரம்மாண்ட துறைமுகம், கொழும்பில் கடலுக்குள், ‘மெரைன் ஸ்மார்ட் சிட்டி’ அமைத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நாடுகளை ரகசியமாக கண்காணிக்க, சீனா, பல நவீன ஏற்பாடுகளை செய்து வருகிறது.

குறிப்பாக, இலங்கையின் தலைநகர் கொழும்பில், சீனா, ‘லோட்டஸ் டவர்’ எனும், ‘தாமரை கோபுரம்’ அமைத்து வருகிறது. கொழும்பில் தாமரைக் கோபுரத்தை நிர்மாணித்தால், சீனா தன், ‘கொலையாளியின் தண்டாயுதம்’ என்று அழைக்கப்படும், நவீன கனரக ஆயுதங்களை அதில் மறைத்து வைத்து, ரகசிய கண்காணிப்பில் ஈடுபட முடியும். இக்கோபுரம் அமைக்கப்படுவது, இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்காசியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக தென்கிழக்கு ஆசியாவிற்கான அரசியல் பார்வையாளர், பாஸ்கர் ராய், அண்மையில் எச்சரித்துள்ளார்.

இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, அண்மையில், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, இலங்கையில் மேற்கொள்ளப்படும் சீன முதலீடுகள் மற்றும் கட்டுமானத் திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யக் கூடாது எனவும், சீன முதலீட்டைப் பாதுகாக்க வேண்டும் எனவும், சீனத் தலைவர்களால், அதிக அழுத்தம்கொடுக்கப்பட்டது.

கடனாளியான இலங்கை:

ஏற்கனவே, இலங்கையின் நெருக்கடியான நிதி நிலைமையை சிறிசேன அரசு சமாளிப்பது, கடினமானதாகவே உள்ளது. இலங்கை அரசு, நான்கு பில்லியன் அமெரிக்க டாலர் கடனை, சீனாவுக்கு திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், அதைக் கடனாக வழங்கி உதவுமாறு சர்வதேச நிதி அமைப்பிடம் இலங்கை அரசு கோரியிருந்தது. ஆனால், இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதால், சீனாவின் கடன் பிடிக்குள் இலங்கை சிக்கி, அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறது. இதைப் பயன்படுத்தி, இந்தியப் பெருங்கடலில், சீனா தன் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு, இலங்கையைப் பயன்படுத்துகிறது.

இந்தியப் பெருங்கடலில், சீனா தன் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக, இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுள், கொழும்பில் அமைக்கப்படும், ‘தாமரைக் கோபுரம்’ திட்டமும் ஒன்றாகும். இக்கோபுரத்தின் கட்டுமானத்திற்காக, சீனாவின் எக்சிம் வங்கி நிதி வழங்கியுள்ளது. இது, பிரான்சில் அமைக்கப்பட்டுள்ள, ‘ஈபிள்’ கோபுரத்தை விட, 26 மீட்டர் அதிக உயரம் கொண்டதாக, 566 கோடி ரூபாயில் இது கட்டப்படுகிறது. இக்கோபுரமானது, சீன தேசிய எலெக்ட்ரானிக் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கூட்டமைப்பாலும், சீன விண்வெளி வர்த்தக விரிவாக்க அமைப்பாலும் நிர்மாணிக்கப்படுகிறது.

ராஜபக்ஷேயின் குளறுபடி:

இலங்கையை முன்பு ஆட்சி செய்த, ராஜபக்ஷே தலைமையிலான அரசு, இவ்விரு சீன நிறுவனங்கள் தொடர்பாகவும் ஆராயவேயில்லை. கொழும்பில் தாமரைக் கோபுர நிர்மாணத்தில் ஈடுபடும் சீன நிறுவனங்களுள் ஒன்றான, எலெக்ட்ரானிக் நிறுவனம், சீனப் பாதுகாப்பு எலெக்ட்ரானிக் முறைமை ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு தொழில்நுட்ப முறைமை நிர்மாணம், பொதுப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான நவீன சாதனங்களை வழங்குதல் உட்பட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.

இதேபோன்று சீனாவின் இன்னொரு நிறுவனமான, சீன விண்வெளிச் செயல்பாட்டு மையமானது, பாதுகாப்பு கருவி மற்றும் சாதனங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்தல், தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபடல், பயங்கரவாத எதிர்ப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்தல், கலக எதிர்ப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்தல், தொழிற்நுட்பங்கள் மற்றும் சேவைகள் போன்றவை உட்பட பல்வேறு ஏற்றுமதி சார் செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.

இலங்கையில், தெற்காசியாவின் மிகப்பெரிய கோபுரத்தை அமைப்பதில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்கள், இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தியா ஆகியவற்றைக் கண்காணிப்பதையே தம் நோக்கமாகக் கொண்டு செயல்படுவது தெளிவாகி விட்டது. இலங்கையில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரம், சீனாவின் மின்னணு கண்காணிப்பு பொறிமுறையை உள்ளடக்கியது என்பதில், எவ்வித சந்தேகமுமில்லை. இவ்வாறான உயரமான கோபுரத்தை அமைப்பதன் மூலம், சீனா தன் மறைமுக ரகசிய கண்காணிப்பை அரங்கேற்ற முடியும்.

தெற்காசியாவுக்கு அச்சுறுத்தல்;

இந்தியப் பெருங்கடலில், சீனா, கண்காணிப்பை மேற்கொள்வதற்குத் தேவையான பொருத்தமான தொழில்நுட்பம் இலங்கையில் தற்போது இல்லை. ஆகவே, தாமரைக் கோபுரத்தை நிர்மாணித்து, சீனா தன் கனரக ஆயுதங்களை மறைத்து வைத்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட முடியும். இக்கோபுரத்தை முழுதாக அமைக்க அனுமதிக்கப்பட்டால், அது இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்காசியாவின் பாதுகாப்பிற்கு, அச்சுறுத்தலாகவே அமையும்.

சீனாவால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம், கொழும்புத் துறைமுகம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஏனைய மூன்று முக்கிய தந்திரத் திட்டங்கள், சீனாவின் மறைமுக சூழ்ச்சித் திட்டத்திற்கு துணையாக அமையும். சீனாவின், 21ம் நுாற்றாண்டுக்கான, ‘கரையோர பட்டுப்பாதைத் திட்டம்’ மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு, சீனா, இலங்கை போன்ற நாடுகளில், தன் முதலீட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.

இலங்கையின் வளர்ச்சிக்காக, சீனா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய முத்தரப்பிற்கும் இடையில் பேச்சுக்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை, முன்னெடுக்குமாறு இலங்கை அதிபரிடமும் வெளியுறவு அமைச்சரிடமும், சீனா கூறியுள்ளது. இலங்கை அதிபர் சிறிசேன, சீனாவில் தங்கியிருந்த போது சீனாவின் இந்த யோசனைக்கு தலையசைத்தது போல் தெரிகிறது. ஆனால் இதற்குள், இந்தியாவையும் கொண்டு வர வேண்டியுள்ளது.

மோடி கவனம்;

இலங்கையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, இந்தியா அதிருப்தி அடைவதை சீனா நன்கறிந்துள்ளது. ஏனெனில் இந்த நடவடிக்கைகளில் சில, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக இந்தியா கருதுகிறது. இலங்கையில் சீனா, கோபுரம் ஒன்றை அமைக்கும் போதும், சீனா தன் நீர் மூழ்கிக் கப்பல்களை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தும் போதும், இறுதியாக, இலங்கையை சிவில் மற்றும் ராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் போதும், இந்தியா இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என, சீனா எண்ணுகிறதா எனக் கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சீனா தன் பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்ற, இந்தியாவைத் தன் வலைக்குள் இழுப்பதற்காக, இலங்கையைப் பயன்படுத்துவது போலவே தெரிகிறது. ஆகவே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற விஷயங்களில் மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர், சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

– தினமலர்