மஹிந்த–ரணிலுக்கிடையில் இரகசிய இணக்கப்பாடு என்கிறது ஜே.வி.பி
விடுதலைப் புலிகள் இயக்கத்துக் கான நிதி உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான குற்றவாளியாவார்.
ராஜபக்ஷ குடுப் பத்தின் குற்றங்களை மூடி மறைப் பதில் அரசாங்கமே அக்கறை காட்டுகின்றது என்று மக்கள் விடுதல் முன்னணியின் தலை வர் அனுரகுமார திசாநாயக குற்றம் சுமத்தினார். மஹிந்தவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடை யில் இரகசிய இணக்கப்பாடு உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவே மஹிந்தவை காப்பாற்றுகின்றார். இந்தகுற்றச்சாட்டு பொய்யெனின் பிரதமர் உடனடியாக நிரூபித்துக் காட்டவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள்விடுதலை முன்னணியால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டில் ஊழல் மற்றும் மோசடிக்கார ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதற்கு மட்டும் அல்லாது குற்றவாளிகளை தண்டிப்பதற்காகவுமே மக்கள் ஜனவரி மாதம் இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தினர். ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி ரணிலை பிரதமராக்கியது அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக மட்டும் அல்ல மக்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவதற்காகவுமேயாகும். இன்று பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கிடைத்திருக்கும் பலம் வெறுமனே அரசியல் அமைப்பில் கிடைத்த பலம் அல்ல அதையும் தாண்டி மக்களால் வழங்கப்பட்டுள்ள பலமாகும். ஆகவே அதனை சரியாக கையாளவேண்டியதும், மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியதும் இவர்கள் இருவரினதும் பொறுப்பாகும்.
மஹிந்த குடும்ப அரசியல்வாதிகளே ஊழலுக்கு காரணம்.
கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற மோசடிகள், ஊழல்கள் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் பிரதான காரணம் ராஜபக் ஷ குடும்ப அரசியல்வாதிகளேயாகும். திவிநெகும திட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற ஊழல்களின் பிரதான பங்காளி யார் என்பதை ஆராய்ந்தால் இறுதியில் பசில் ராஜபக் ஷவே குற்றவாளியாக உள்ளார். எவன்கார்ட் ஆயுத வழக்கிலும், மிக் விமான விற்பனையிலும் பிரதான குற்றவாளி யார் என்பதை விசாரித்தால் கோத்தாபய ராஜபக் ஷவே உள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிதி முறைக்கேடு குற்றச்சாட்டின் பிரதான குற்றவாளி யார் என்பதை ஆராய்ந்தால் யோசித்த ராஜபக் ஷவே உள்ளார், கெத்தாராம விளையாட்டு மைதானத்தின் மின் விளக்குகளை தமது தனிப்பட்ட தேவைக்காகவும் கண்டியில் கார் பந்தையம் நடத்தவும் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரதான குற்றவாளி யார் என்பதை ஆராய்ந்தால் நாமல் ராஜபக் ஷவே உள்ளார். சிரிலிய சிறுவர் வங்கிக் கணக்கு நிதி மோசடிகள் குற்றச்சாட்டில் பிரதான குற்றவாளி யார் என்பதை ஆராய்ந்தால் சிரந்தி ராஜபக் ஷவே உள்ளார். அதேபோல் உக்ரைன் நாட்டுக்கான ஆயுத விற்பனை, புஷ்பா ராஜபக் ஷ நிறுவன மோசடிகள் தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷவின் குடுப்ப உறுப்பினர்கள் நேரடி தொடர்பினை வைத்துள்ளனர்.
விடுதலைப்புலிகளுடன் மஹிந்தவுக்கு தொடர்பு இருந்தது.
அதேபோல் விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கத்துக்கான நிதி உதவி வழங்கியதில் விசாரணைகளை நடத்தினால் இறுதியில் பிரதான குற்றவாளியாக மஹிந்த ராஜபக் ஷவே உள்ளார். 2006 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கியமை மற்றும் ஆயுத விற்பனை என்பவற்றில் மஹிந்த ராஜபக் ஷ தொடர்புபட்டுள்ளார். இவை அனைத்துக்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மூடி மறைத்து மஹிந்தவை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். அத்தோடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் 20 அமைச்சர்கள் தொடர்பிலும் அவர்கள் மஹிந்த கூட்டணியுடன் சேர்ந்து செய்த குற்றங்கள் தொடர்பிலும் ஆதாரங்கள் உள்ளன.
கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்கள் பலரும் மஹிந்த குடும்ப ஊழல் செயற்பாடுகளுடன் நேரடி தொடர்பினை வைத்துள்ளனர். முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், முன்னாள் நிதியமைச்சின் செயலாளர், ஜனாதிபதி செயலாளர் ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டுள்ளனர். இவை அனைத்துக்குமான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் உள்ளது. எம்மிடமும் முழுமையான ஆதாரங்கள் உள்ளன. இப்படியான பல மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களை செய்த மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்தினை தண்டிக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் பிரதான குற்றவாளிகளை எதோ ஒரு காரணத்துக்காக பாதுகாக்கப் படுகின்றனர்.
இவர்கள் தொடர்பில் இலங்கையில் பிரதான மூன்று பிரிவுகளில் மட்டுமே விசாரிக்க முடியும். குறிப்பாக குற்றப் புலனாய்வு பிரிவு, நிதி மோசடி பொலிஸ் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழு இவை மூன்றுமே பிரதான விசாரணை பிரிவுகளாகும். ஆனால் இவை மூன்றும் இன்று ஒருசிலரின் தேவைக்காக மட்டுமே செயற்படுகின்றன. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக சுயதீன ஆணைக்குழுக்கள் அமைத்தும் ஒரு சில விடயங்களில் மட்டுமே சுயாதீனத் தன்மை உள்ளதே தவிர பிரதான குற்றவாளிகளை தண்டிப்பதற்கான சகல ஆதாரங்கள் இருந்தும் அவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் பின்நிற்கின்றது. இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதான காரணமாகும்.
ரணிலே மஹிந்தவை காப்பாற்றுகின்றார்.
மஹிந்தவை காப்பாற்றுவதில் பிரதமர் ரணிலின் பங்கு அதிகமாகவே உள்ளன. இவர்கள் இருவருக்கும் இடையில் அரசியல் சார் தொடர்புகள் உள்ளன. மஹிந்த ராஜபக் ஷ குடும்ப அரசியல்வாதிகள் செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சகல ஆதாரங்களும் அரசாங்கத்திடம் உள்ளன. இருந்தும் அவர்கள் விடயத்தில் காலம் கடத்துவது ஏன் ? இவ்வாறான மிகப்பெரிய குற்றவாளிகளை காப்பாற்றுவதில் அரசாங்கத்துக்கு என்ன இவ்வளவு அக்கறை என்ற பல கேள்விகள் இன்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த் ராஜபக்ஷ் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் இரகசிய தொடர்புகள் உள்ளது. இருவரும் திட்டமிட்டே காய் நகர்த்துகின்றனர். இந்த குற்றச்சாட்டு பொய்யெனில் அதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும். குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும். 19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதுடன் குற்றங்கள் தடுக்கப்படப்போவதில்லை. 19ஆவது திருத்தத்தின் ஊடாக குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். குற்றவாளிகளை தண்டிப்பதை தான் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்தும் முக்கிய சூழ்ச்சிதாரர் ரணில் விக்கிரமசிங்கவே. அவரே மஹிந்த கூட்டணியை பலப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக உடைக்கும் வேலையை செய்கின்றார். அதபோல் மைத்திரிபால சிறிசேன தனது கட்சியை பலப்படுத்தும் நோக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற முயட்சிக்கின்றார். ஆகவே பிரதான இரு கட்சிகளின் பலப் போட்டியில் குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆகவே இதை உடனடியாக நிறுத்தி பிரதான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடந்துகொள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.