புத்தர் சிலை விவகாரம்! ஜனாதிபதியிடம் முறையிடும் கூட்டமைப்பு
முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்க முயற்சிக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அடுத்த வாரம் கூடவுள்ள நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றில் புத்தர் சிலை அமைப்பதற்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை மக்கள் அணிதிரண்டபோது மூவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் இப்படியான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் அதன் தொடர்ச்சிகள் காணப்படுகின்றமை கவலையை அளிக்கின்றது. எனவே இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரிடம் முறையிடவுள்ளோம் – என்றார்.