மட்டக்களப்பில் வெளிமாவட்ட சிங்கள வாக்காளர்கள் பதியப்படுவதாக புகார்
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்குப் பின்னர்தென்மேற்கு எல்லையிலுள்ள அரசகாணிகளில் அத்துமீறி குடியேறியுள்ளதாகக் கூறப்படும் வெளிமாவட்ட சிங்களவர்களை வாக்காளர்களாக பதிவு முயற்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையான கெவிலியாமடுவில் போருக்குப் பின்னர் அம்பாரை மாவட்ட சிங்களவர்கள் அத்துமீறி அரசகாணிகளை அபகரிப்பதாக ஏற்கனவே அந்த பகுதியிலுள்ள தமிழர்களினால் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கொக்கட்டிச்சோலை பிரதேசவாசியொருவரால் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கடும்போக்குடைய பௌத்த அமைப்புகளும் பௌத்த பிக்குகளும் இதனை நிராகரித்து அவர்களுக்குக் காணிஉரிமை வழங்க வேண்டும் என ஏற்கனவே மட்டக்களப்பு நகரிலும் பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாகவும் ஆர்பாட்டங்களை நடத்தியுள்ளன.
2015ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்படிவங்கள் தற்போது நாடு முழுவதும் தேர்தல் இலாகாவினால் விநியோகிக்கப்பட்டுவருகின்றது. இந்த ஆண்டு வழமைக்கு மாறாக இவர்களுக்கு இந்த படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான பொன். செல்வராசா குற்றம் சுமத்தினார்.
அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் ஏற்கனவே அந்த மாவட்டத்தில் வாக்காளராக பதிவு செய்தவர்கள் என்றும் அரச காணிகளை அபகரிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை இம்மாவட்ட வாக்காளராக பதிவு செய்வது ஏற்க முடியாது என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக அரச காணிகளில் தங்கியுள்ளவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந் நடவடிக்கை அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கூறினார்.
இது தொடர்பாக அரசாங்க அதிபர் பி. எம். எஸ். சார்ள்ஸைத் தொடர்பு கொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினரால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விடயத்தை எழுத்து மூலம் தான் கேட்டுள்ளதாக கூறினார். அதன் பின்னரே இது தொடர்பாக தேர்தல் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு இதுகுறித்த விவரங்களை அறியமுடியும் என்றும் அவர் பதில் அளித்தார்.