Breaking News

இலங்கையில் ஊடகங்களின் நிலை குறித்து அறிய வருகிறார் அமெரிக்க உயர் அதிகாரி

கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், இலங்கையில் ஊடகங்களின் நிலை குறித்து மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த வாரம் கொழும்பு வரவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலரான எலீன் ஓ கோணர், இந்தப் பயணத்தின் போது, இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடுவார்.

இவர் முன்மொழியப்பட்டுள்ள தகவல் உரிமைச் சட்டம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதி உதவிச்செயலர் எலீன் ஓ கோணர் முன்னர் ஊடகவியலாளராகவும், மனித உரிமை சார்ந்த அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் சட்டப் பிரச்சினை முகாமைத்துவம் சார்ந்த சிறப்பு சட்டவாளராகவும் இருந்து வருகிறார்.