மஹிந்த நாடாளுமன்றத்திற்கு வருவது கூட எமக்கு அச்சம்தான்! பாலித்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராகுவதனை விடுத்து பாராளுமன்ற உறுப்பினராவது கூட எமக்கு பயத்தையே ஏற்படுத்துகின்றது என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
மேலும் மஹிந்த ராஜபக்ச மீளவும் பிரதமராக வந்து இந்த நாட்டை ஆட்சி புரிய முனைந்தால் இலங்கையின் மீது இடிதான் விழும். ஆகையால் அதற்கு முன்பு அவரை அரசியலிலிருந்து துரத்தியடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பி்ட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போதே பிரச்சினைகளும் குழப்பங்களும் அதிகரித்தன. எனினும் நாட்டு மக்களின் ஒத்துழைப்பினால் ஜனவரி 8ம் திகதி அந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.
முன்னைய ஆட்சியாளர்களினால் கொள்ளையடிக்கப்படாத எந்தத் துறையுமே நாட்டில் இல்லை என்று கூறலாம். பெருந்தெருக்கள் அபிவிருத்திக்கு தேசிய சேமிப்பு வங்கியின் மூலம் பெறப்பட்ட கடன் தொகையான 55 மில்லியன் ரூபாவில் 28 மில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாமலேயே உள்ளது. எனவே இது தொடர்பிலான உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இந்நிலையில் தென் மாகாண அமைச்சர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி மீளவும் உதயமானால் பொலிஸாரை கல்லெறிந்து கொல்வோம் என கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களின் வெளிப்பாடே இவரது கருத்தாகும்.
ஆகவே இந்த கருத்தானது தண்டனைக்குரிய குற்றமாகும். தென்மாகாண அமைச்சரின் கருத்துக்கு எதிராக பிடியாணை இல்லாமல் கைது செய்வதற்கான அதிகாரம் பொலிஸாரிற்கு உள்ளது. மேலும் 7 வருட சிறைத்தண்டனையும் வழங்க முடியும். எனவே இது குறித்து உரிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மீளவும் அரசியலில் குதிக்க முனைகிறார். முன்னைய ஆட்சியின் போது வெள்ளைவான் கடத்தல், கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட மோசடிகளால் நிறைந்த கலாசாரமே காணப்பட்டது. அதனை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கத்தை சாதகமாக்கவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலுக்கு வருகைதர முயற்சிக்கின்றார்.
எனவே முன்னாள் ஜனாதிபதி பிரதமராகுவதனை விடுத்து சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகுவது கூட எமக்கு அச்சமாகவே உள்ளது. முன்னைய ஆட்சியின் போது நாட்டில் நிலைக்கொண்டிருந்த நிலைமை மீளவும் ஏற்பட்டு விடுமோ என்ற பயமே எமக்கு காணப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ச மீளவும் பிரதமராக வந்து இந்த நாட்டை ஆட்சி புரிய முனைந்தால் இலங்கையின் மீது இடிதான் விழும். இவரது ஆட்சியினால் நேர்மை நிலைத்து நிற்காது. இதன் விளைவாக நாட்டிற்கே பாரிய அழிவுகள் ஏற்படும்.
இதேவேளை சிரந்தி ராஜபக்சவை சாட்சியம் பெறுவதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைத்தமை தொடர்பில் அவரது மகன் நாமல் ராஜபக்ச மிகவும் கவலை அளிக்கும் வகையிலான கருத்துக்களை ஊடகங்களில் பரிமாறுகிறார். தன்னுடைய தாயை விசாரணைக்கு அழைத்தமையை நினைத்து நாமல் ராஜபக்ச, கவலைப்படுகிறார்.
அதேவேளை முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு பலவந்தமாக விரட்டியடித்ததை நினைத்து பார்க்க வேண்டும். அது மாத்திரமின்றி ஷிரானி பண்டாரநாயக்க பல தடவைகள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கும் வந்து சாட்சியம் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஷிரானி பண்டாரநாயக்கவை குற்றவாளி கூண்டில் நிறுத்திய போது அவரது மகன் எத்தகைய வேதனைகளை சுமந்திருப்பார் என்பதனை நாமல் ராஜபக்ச உணர்ந்து கொண்டுள்ளார். ஷிரானி பண்டாநாயக்கவினை போன்று எத்தனை பேர் ராஜபக்ச ஆட்சியின் போது துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதனை நாமல் ராஜபக்ச எம்.பி புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.