Breaking News

சர்வதேச அங்கீகாரத்துடன் சமஷ்டி முறையிலான தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்

அரைகுறை தீர்வை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆகக்குறைந்தது சமஷ்டி தீர்வாவது கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் இன்று நல்லிணக்கம் பற்றி கதைக்கின்றது. மீள் நல்லிணக்கம் என்றும் கூறுகின்றனர், அப்படி என்றால் இந்த நாட்டில் இதற்கு முன்னர் எப்போது நல்லிணக்கம் காணப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்து 67 வருடங்கள் கடந்து விட்டது. எனினும் நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. ஆனால் எமது பிரச்சினைகள் எதனையும் ஏற்றுக்கொள்ளாமல் இவர்கள் நல்லிணக்கம் பற்றி கதைக்கின்றார்கள்.

பெரும்பான்மையினருக்கு பாவமன்னிப்பு வழங்குவதா? இல்லையா என்று தமிழினம் தான் முடிவெடுக்க வேண்டும். தமிழ் மக்களின் தலைவிதியை விளையாட்டாக எண்ணி சில சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்த விடயத்தில் தரகர்களாக செயற்படுகின்றனர்.

இவர்களுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை சார்ந்த ஒரு சிலரும் செயற்படுகின்றனர். தரகர்களை நம்பி அரைகுறை தீர்வை முன்னெடுப்பதை நிறுத்த வேண்டும். தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் பிழையான செய்தியை உலகுக்கு காட்டமுற்பட வேண்டாம். சமஷ்டியை ஆகக்குறைந்த தீர்வாக ஏற்போம். இல்லையென்றால் சர்வதேச சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நாங்கள் கோரும் காலம் விரைவில் ஏற்படும் என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGTZSUgt3H.html#sthash.PuYugLqP.dpuf