ஜனாதிபதி கேட்டுக்கொண்டால் விவாதத்தை பிற்போடத் தயார்
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை தாமதப்படுத்துமாறு ஜனாதிபதி எம்மிடம் கோரினால் அதனை செய்வதற்கு தயாராக இருக்கின்றோம் என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. க்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. க்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சில தினங்களில் இந்த பிரேரணை மீதான விவாதம் கோரப்படலாம்.
இந்நிலையில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை தாமதப்படுத்துமாறு ஜனாதிபதி எம்மிடம் கோரினால் அது குறித்து சாதாகமான தீர்மானம் எடுக்க தயாராக இருக்கின்றோம்.
அதாவது 20 ஆவது திருத்தச் சட்டமாக வரவுள்ள தேர்தல் முறை மாற்றத்தை கருத்திற்கொண்டும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தும் இதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருருக்கின்றோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கோரிக்கையை முன்வைத்தால் நாம் அதனை செய்ய தயாராக இருக்கின்றோம் என்றார்.