பாராளுமன்றத்தை கலைத்ததும் மைத்திரியுடன் இருப்பவர்கள் மஹிந்தவுடன் இணைவார்கள்!
நாட்டின் தேசிய பாதுகாப்பு இன்று பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டும் போது எம் மீது இனவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுவதாக தெரிவிக்கும் மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் மைத்திரியுடன் இருப்போர் மஹிந்தவுடன் இணைவார்கள் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக உதயகம்மன்பில மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் தேசிய பாதுகாப்பு பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. மீண்டும் புலிகள் தலைதூக்குகின்றனர். ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் வடக்கில் மீண்டும் புலிகள் இயக்கம் தலைதூக்குகின்றது. புலப்பெயர் புலி ஆதரவாளர்களினதும் கை ஓங்குகின்றது. இவ்வாறானதோர் சூழ்நிலையில் யுத்தத்தை முடித்து பயங்கரவாதத்தை ஒழித்த தலைவரென்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இது தொடர்பாக அக்கறை செலுத்துகின்றார்.
மக்கள் மத்தியில் பேசுகின்றார். இதனை இனவாதம் பேசுவதாக முத்திரை குத்தி அரசியல் லாபம் பெற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அணியினர் முயற்சிக்கின்றனர்.
புலிகளுக்கு எதிரான யுத்தம் முன்னெடுக்கப்பட்ட போதும் அதற்கும் இனவாத சாயம் பூசினார்கள். இன்று ஜனாதிபதி என்ற அதிகாரம் மைத்திரிபால சிறிசேனவிடம் இருப்பதால் பலர் அவரோடு இணைந்துள்ளனர். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் மைத்திரியுடன் இணைந்திருப்போர் அனைவரும் மஹிந்தவுடன் வந்து இணைவார்கள். அது மட்டுமல்ல மஹிந்த வெற்றிலைச் சின்னத்தில் பொது தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகும்.
அவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்கா விட்டால் வேறொரு அணியில் மஹிந்த போட்டியிடுவார். இன்று நாமும் மக்களும் கேட்பது மஹிந்தவே ஆகும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.