பாராளுமன்றத்தைக் கலைக்க சபாநாயகர் பரிந்துரை
பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார். அரசியலமைப்பு சபைக்கான வெளியக உறுப்பினர்களின் நியமனத்தை உறுதிப்படுத்துவதற்காக இன்று காலை பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வு ஆரம்பமானது.
எனினும், பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் விரைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் இருதரப்பு உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து குழப்பத்தை ஏற்படுத்தியதால், சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர், இருதரப்பு உறுப்பினர்களும் விரும்புவதால் பாராளுமன்றம் விரைவாக கலைக்கப்பட வேண்டும் என்று தாமும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். எனினும், பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தன்னைத் தானே கலைக்கும் அதிகாரம், 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அவ்வாறான ஒரு கலைப்பு இடம்பெறவில்லை. இதனிடையே, சபாநாயகர் சமல் ராஜபக்ச பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.