Breaking News

"தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதில் கடற்படை அதிகாரிகளுக்குத் தொடர்பு"

கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் இலங்கைக் கடற்படை அதிகாரிகள் சிலர் சம்பந்தப் பட்டுள்ளதாக இலங்கைக் காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காணாமல்போனோர் தொடர்பான வழக்கின் விசாரணை புதனன்று நடந்தபோது சாட்சியமளித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க, சம்பந்தப்பட்ட இளைஞர்களின் கடத்தல்களுடன் சுமித் ரணசிங்க மற்றும் சந்தன குமார ஆகிய இலங்கை கற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக தான் மேற்கொண்ட விசாரணைகளின்போது தெரியவந்ததாகக் கூறினார்.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்கொண்டு செல்லப்படுகின்ற காரணத்தினால் அவர்களைக் கைது செய்யவில்லை என்று கூறிய பொறுப்பதிகாரி, ஆனால் அவர்களின் வெளிநாட்டு பயணங்களைத் தடைசெய்யும் உத்தரவொன்றை நீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இவர்கள் இருவர் தவிர சம்பத் முனசிங்க எனும் மேலும் ஒரு கடற்படை அதிகாரியும் இந்த கடத்தல்களில் சம்பந்தப்பட்டுள்ளதை தான் மேற்கொண்ட விசாரணைகளின்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதாகவும் பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க கூறினார்.

மேலும் இந்த மூன்றாவது சந்தேக நபருக்கு கடந்த காலத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் நிகழ்ந்த கடத்தல் சம்பவங்களுடனும் தொடர்பிருப்பதாக தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் ரஞ்சித் மூனசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் 23 தேதி வரை ஒத்திவைக்கப் பட்டது.