இறுதிப்போரின் உண்மையைக் கண்டறிய வேண்டியது முக்கியம் – பிரித்தானியத் தூதுவர்
போரினால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்தும் நடவடிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியும் செயற்பாடு முக்கியமானது என்று இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“உள்ளக விசாரணையை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை இலங்கையே தீர்மானிக்க வேண்டும். அது இலங்கையினால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமாகும். காயங்களைக் குணப்படுத்தும் செயற்பாட்டில், போரின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியும் நடவடிக்கை மிகவும் முக்கியமானது.
இந்த விடயத்தில் அனைத்துலக சமூகம் அக்கறை காட்டுகிறது. நம்பகமான உள்ளக விசாரணை செயல்முறை விடயத்தில், இலங்கை அரசாங்கம் எம்மிடம் உதவுமாறு கோரிக்கை விடுத்தால், அதனை பரிசீலிக்க பிரித்தானியா தயாராக இருக்கிறது. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் நெருக்கமான அக்கறையுடன் இருக்கிறார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.