நாட்டைவிட்டு வெளியேறிய தமிழர்களை அழைக்கவேண்டிய பொறுப்பு அரசுக்குள்ளது - சுமந்திரன்
யுத்த காலகட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குள் அழைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. இனவாதக் கருத்துக்களை பரப்புவது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்துக்கும் யுத்தத்தில் தமிழ் மக்கள் வெளியேறியமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனைத் தொடர்புபடுத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்த காலகட்டத்தில் வெளியேறிய தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குள் அழைக்கவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளில் யுத்தத்தால் வெளியேறிய தமிழ் மக்களை மீண்டும் இந்த நாட்டுக்கு அழைத்து வரவேண்டும். இந்த மக்கள் தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே அகதிகளாக வெளியேறினார்கள். ஆகவே யுத்தகாலகட்டத்தில் வெளியேறிய மக்களை மீண்டும் நாட்டுக்குள் அழைத்துவரவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. அதேபோல் இன்று இரட்டை பிரஜாவுரிமை கொடுக்க வேண்டிய கோரிக்கைகளை எல்லாம் அரசாங்கம் அங்கீகரித்துள்ள நிலையில் புலம்பெயர் தமிழ் மக்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவிப்பது நியாயமான கருத்தாக நாம் கருதவில்லை. இவ்வாறான கருத்துக்கள் முழுமையாக இனவாதத்தை பரப்புவதாகவே நாம் கருதுகின்றோம். கடந்த அரசாங்கம் இனவாதத்தை கக்கியமையின் காரணத்தினாலேயே இன்று மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அரசாங்கமும் இனவாதத்தை கையாள்வது அரசாங்கத்துக்கு நல்லதல்ல.
மேலும் சிறிமா- – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டமை வேறு விடயமாகும். இரண்டு நாடுகளினதும் அன்றைய அரசாங்கங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நடைபெற்ற சம்பவங்களும் யுத்தத்தில் மக்கள் இடம்பெயர்ந்ததும் ஒன்றாக முடியாது. கடந்த காலத்தில் தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத சக்திகளால் விரட்டியடிக்கப்பட்டனர்.
சொத்துக்களையும் உடமைகளையும் இழந்து தமது நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். மக்களுக்கு மீண்டும் அவர்களது சொந்த நிலங்களில் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.