Breaking News

ஊடகவியாளர்கள் கொலை விசாரணைகளில் சர்வதேச மேற்பார்வை தேவை

இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை பணியாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள், சர்வதேச ஊடக அமைப்புக்களின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும்

என யாழ்ப்பாணத்தில் உள்ள ஊடக மையம் ஜனாதிபதியிடம் கோரியிருக்கின்றது. இது தொடர்பாக அந்த அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருக்கின்றது.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளதையடுத்தே இந்தக் கடித்தை யாழ் ஊடக மையம் அவருக்கு அனுப்பி வைத்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலளர் மயில்வாகனம் நிமலராஜன் கொல்லப்பட்டதன் ஊடாக ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அடித்தளம் இடப்பட்டிருந்தது என்று யாழ் ஊடக மையம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாமல் ஊடக நிறுவனங்களும் பல தடவைகள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதையும் குறித்துக் காட்டியுள்ள யாழ் ஊடக மையம் ஊடகத்திற்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் குறித்தும் ஊடகவியலாளர்கள் கொலைகள் குறித்தும் கடந்த காலங்களில் உருப்படியான முறையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதை நினைவுபடுத்தியிருக்கின்றது.

இது தொடர்பில்  கருத்து வெளியிட்ட யாழ் பிரதேச ஊடகவியலாளரும், யாழ் ஊடக அமைப்பின் காப்பாளருமாகிய இரத்திம் தயபாரன், கடந்த காலங்களில் நடத்தப்பட்ட விசாரணைகள் ஒரு கண்துடைப்பாகவே நடத்தப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளில் நம்பிக்கை இழந்திருப்பதாகவும், எனவே தான் நடைபெறவுள்ள விசாரணைகள் சர்வதேச ஊடக அமைப்புக்களின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும் என கோருவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்று அறிவிப்பதற்கு முன்பே உள்ளுர் மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில்; சர்வதேச கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமு; என்பதைத் தாங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்தி வந்திருப்பதாகவும் தயாபரன் குறிப்பிடுகின்றார்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இராணுவத்தினரைக் குற்றம்சாட்டும் வகையில் நடத்தப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் கொலைகள் மட்டுமல்லாமல், தமிழ் போராட்ட அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்ற ஊடகவியலளர்களின் கெலைகள் மற்றும் இறுதி யுத்தத்தின்போது வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இயங்கி வந்த ஊடகங்களில் பணியாற்றி காணாமல் போயுள்ள அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் தொடர்பிலும் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களுடைய கோரிக்கை என்றும் யாழ் பிரதேச ஊடகவியலாளரும், யாழ் ஊடக அமையத்தின் காப்பாளருமாகிய இரத்தினம் தயாபரன் தெரிவித்தார்.