டக்ளஸுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் முறைப்பாடு
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக யாழ். மாவட்ட பாரஊர்திகள் உரிமையாளர் சங்கத்தினர் ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு கோடி ரூபா பணம் சட்டவிரோதமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை உடனடியாக திருப்பித்தரும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்.மாவட்ட பாரஊர்திகள் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று காலை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக முறைப்பாடொன்றை செய்திருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் யாழ். மாவட்ட பாரஊர்திகள் உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். முறைப்பாட்டை செய்தபின்னர் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாரஊர்திகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று (நேற்று) முறைப்பாடொன்றை செய்துள்ளனர் . அதாவது கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து இந்த சங்கத்தினூடாக தொழில் புரியும் நபர்களின் ஒவ்வொரு வாகனத்துக்கும் ஐந்து ஆயிரம் ரூபாய் அடிப்படையில் அறவிட்டுள்ளதுடன் அதற்கு மேலாகவும் ஒவ்வொரு பயணத்துக்கும் 300 ரூபாய் அடிப்படையில் அறவிட்டுள்ளது.
இந்த பணத்தொகை ஏறத்தாழ இரண்டு கோடி ரூபாய் அளவில் உள்ளது. அதை திருப்பிக் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி முறையிட்டுள்ளனர்.
அதேபோல் இதுவரை காலமும் இந்த பாரஊர்திகளை மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்தியுள்ளனர். ஆனால் மணல் வியாபாரத்திலும் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் இருக்கின்றன. அவை சம்பந்தமான மேலதிக முறைப்பாடுகளும் எதிர்வரும் காலங்களில் செய்யப்படும். ஏராளமான பணத்தை மக்களிடம் அறவிட்டு பொது மக்களை கஷ்டப்படுத்தி உள்ளனர். பொது மக்களின் பணத்தை ஏமாற்றி அறவிட்டுள்ளனர். மேலும் இவ்வாறான மோசடிகள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று இருக்கின்ற நிலையில் பயத்தின் காரணமாக வாய் மூடி இருந்த மக்கள் இன்று தமது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர் ஆகவே உடனடியாக இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும்படி நான் முறைப்பாடு செய்துள்ளேன் எனக் குறிப்பிட்டார்.