அன்று தேவைப்பட்ட பிரபாகரன் இன்று தேவைப் படவில்லையா? சீமான் ஆவேசம்
தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குகளை பெறுவதற்காக அ.தி.மு.க.வு.க்கு தேவைப்பட்ட பிரபாகரன் படம், இப்போது ஆட்சிக்கு வந்த பின்னர் தேவைப்படவில்லையா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகை மாவட்டம், வேளாங்கன்னியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நிறுவிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிலையை பொலிஸார் நேற்று முன்தினம் இரவோடு இரவாக அகற்றினர். அதேபோல நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் வைக்கப்பட்ட பிரபாகரனின் உருவப்படம் தாங்கிய பதாகைகளும் பொலிஸாரினால் அகற்றப்பட்டன. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சீமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,வாரிசு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சிப் பின்புலமோ இல்லாமல், முதல் தலைமுறையாக சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னை, பொதுவெளியில் களமாடவைத்தது இலங்கை தமிழ் அரசியல்தான். இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளில் இருந்து பிறந்தவர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த்தேசிய அரசியலின் தேவையை உணர்ந்து, ‘நாம் தமிழர் கட்சியை உருவாக்கினோம். சில காலமாகவே நாம் தமிழர் கட்சியின் முதல் மாநாட்டுக்கான வேலைகளைத் திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். மாநாட்டுக்கு ஏக அரசுக்கெடுபிடிகள். கடைசி நேரத்தில் தலைவர் பிரபாகரனின் படங்களை அப்புறப்படுத்தினார்கள்.
இதே பிரபாகரனின் படத்தின் கீழ் நின்று வாக்குகள் கேட்டபோது, அதை வரவேற்றது அ.தி.மு.க அரசு. அன்றைக்குத் தேவைப்பட்ட பிரபாகரன், இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படவில்லை. ஆனால் திருச்சியில் நடைபெற்ற அம் மாநாட்டில் இலட்சம் இளைஞர்கள் திரள, பிரபாகரன் என்ற பெருநெருப்பே காரணம்.
மேலும், ஈழத்தை வர்த்தகமாக்குவதாக எம்மை விமர்சிக்கின்ற தி.மு.க உண்மையில் ஒரு கட்சி அல்ல. ஒரு தொழில்நிறுவனம். தேர்தல் நேரத்தில் நிதி கேட்பார்கள். வேட்பாளர் தேர்வு நேர்காணலின்போது, ‘கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுப்பாய்?, தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய்?’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தேர்தலை வைத்துத் தொழில் செய்யும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், அனைத்தையும் வர்த்தகமாகத்தானே பார்ப்பார். இத்தனைக்கும் ஈழத்தை வைத்து வர்த்தகம் செய்ததே தி.மு.க.தான். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களால் அதன் ஈழ வியாபாரம் படுத்துவிட, இப்போது கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் டெசோ என்ற டம்மி அமைப்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.