ஐ.தே.க. வின் வெற்றியின் பின்னணியில் வெளிநாட்டு சதி - பந்துல குணவர்த்தன
ஐ.தே.க.வின் கைதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாகியிருப்பதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருக்கிறார். ஜனவரி 8 தேர்தல் வெற்றிக்கு வெளிநாட்டு சக்திகள் சில ஐ.தே.க.விற்கு ஆதரவு வழங்கியிருந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.
‘ஐ.தே.க. வின் வெற்றியின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருந்தது. எங்களது நிலைமையைப் பொறுத்தவரை ‘சதி’அசோக் கே மேதாவினால் வரையறை செய்யப்பட்டிருந்தது. அவர் இந்திய இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல். அத்துடன் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பத்தியாளராகவும் இருக்கிறார். முன்னாள் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான வானவில் கூட்டணியாக இது இருந்ததென அவர் விபரிக்கின்றார் என்று பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
இந்து பத்திரிகையில் அசோக் கே மேதா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். வானவில் கூட்டணி ராஜபக்ஷவை வீழ்த்தியது. லண்டனிலும் புதுடில்லியிலும் கொழும்பிலும் 18 மாதங்களுக்கு மேலாக இரகசிய சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன. இடதுசாரி, வலதுசாரி கலவைகொண்ட அரசியல்வாதிகள், கல்விமான்கள் ,சட்டத்தரணிகள், பௌத்த பிக்கு ஆகியோருக்கிடையில் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரசியலமைப்பு நிபுணர் ஜயம்பதி விக்கிரமரத்ன, இடதுசாரி கல்விமான் குமார் டேவிட், சிங்கள பௌத்த பிக்கு வண.மாதுலுவாவே சோபித தேரர் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் கல்விமான்களுக்கு இடையில் இரகசிய சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன. கடினமான விடயமாக இருந்தது சிறிசேனவை உள்ளீர்ப்பதாகும். ஆதலால் மிகவும் கசப்பான அரசியல் எதிராளிகளான திருமதி குமாரதுங்கவும் விக்கிரமசிங்கவும் ஒன்றாக அமர முடிந்தது.
100 நாள் மறுசீரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. கூட்டணியில் இருந்த சகலரும் அதில் கைச்சாத்திட்டனர். 18 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு 17 ஆவது திருத்தத்தை மீள ஏற்படுத்துதல், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக பாராளுமன்ற முறைமையை ஏற்படுத்துதல் போன்ற திட்டங்களில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்த வருட பிற்பகுதியில் பாராளுமன்றத் தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பை மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் நூறு நாட்களின் பின்னர் என்ன நடந்தது?
ஐ.தே.க.வின் பொறியில் சிறிசேன அகப்பட்டுள்ளார் என்று குணவர்தன கூறியுள்ளார். அத்துடன் ஐ.தே.க.வினரால் ஜனாதிபதி மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனாலேயே எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு உரிமையில்லை என அவர் கூறியுள்ளார் என்றும் பந்துல குணவர்தன தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் சிறிசேனவினால் வெளியிடப்பட்ட கருத்தானது புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமன்றி முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ மீது ஜனாதிபதியும் பகைமையையும் வெறுப்பையும் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது என்று பந்துல குணவர்தன மேலும் தெரிவித்திருக்கிறார்.