அதிகாரம் படைத்த உள்நாட்டு பொறிமுறையே உருவாக்கப்பட வேண்டும் – அமெரிக்க செனட்டர்
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு தனியே உள்நாட்டுப் பொறிமுறையை அமைப்பது மட்டும் போதுமானதல்ல, அது விசாரணை செய்யவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் அதிகாரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை நிலவரம் குறித்து ஜனநாயக கட்சியின் மூத்த செனட்டரான, பற்றிக் லேஹி, உரையாற்றினார்.
இதன் போதே அவர், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை சுதந்திரமானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் உள்நோக்கம் குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளை வரவேற்றுப் பேசிய செனட்டர் பற்றிக் லேஹி, “இவையெல்லாம் முதற்படிகள் தான், இலங்கை அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் அதன் உள்நோக்கம் குறித்து கேள்வியை எழுப்புகின்றன. உதாரணமாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் புதிய இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கைதிகள் சட்டத்துக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டது, அரசபடைகளின் ஆட்டிலறி தாக்குதலில் எண்ணிக்கை தெரியாத பொதுமக்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட பரந்தளவிலான மீறல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த படைப்பிரிவுகளில் ஒன்றுக்குத் தலைமை தாங்கியவர்.
கடந்தகால குற்றங்களுக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக இருக்குமானால், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் போன்ற மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
மூத்த இராணுவத் தளபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால், குறிப்பாக இன்னமும் சேவையில் உள்ள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை மோசமாகப் பலவீனப்படுத்தும். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு தனியே உள்நாட்டுப் பொறிமுறையை அமைப்பது மட்டும் போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை.
உண்மையைச் சொல்லும், நீதிச் செயல்முறை மட்டும் போதுமானதல்ல.அது நம்பகமானதாக சுதந்திரமானதாக இருக்க வேண்டும். அந்த சுதந்திரமான பொறிமுறை விசாரணை செய்யும், சட்டத்தின் முன் நிறுத்தும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு பொருத்தமான தண்டனைகளை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.