லண்டன் பேச்சு தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் சபை விமர்சனம்!
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களுக்காக பேசுவதற்கு உலக தமிழர் பேரவைக்கு மக்கள் ஆணையில்லை என்று, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட்சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்றத்துக்கு செனட் சபையினால் அறிவுறுத்தல் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. லண்டனில் அண்மையில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியமை தொடர்பிலேயே இந்த குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இதில், இலங்கைக்கு வெளியில் வாழும் சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப யோசனைகளையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
1). இரண்டு மடங்கானாலும், எமது இலக்குகளில் இருந்து மாறிச்செல்லக்கூடாது.
இலங்கையில் குற்றமிழைத்தோரை ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்னிலைப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
-தமிழீழ இறைமைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
2). இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களுக்கு அவசர தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியம். எனினும் அதனைக்கொண்டு தமிழர்களை இலங்கை அரசாங்கம் பிரித்து விடுவதற்கு வழியேற்படுத்திவிடக்கூடாது. எங்களை பலவீனப்படுத்தி அதன் மூலம் அவர்கள் கூறுகின்றதை ஏற்றுக்கொள்ள எங்களை உந்துவதற்கு இடமளிக்கக்கூடாது.
3). உடனடி தேவை என்ற அடிப்படையில் அவை, தனியாக நோக்கப்பட்டு அவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர வேண்டும். எனினும் அது நாம் ஏற்கனவே இழந்துள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறைமை என்பவற்றுடன் இணைக்கப்படக்கூடாது.
4.) இலங்கை அரசாங்கத்துடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அல்லது தெரிவுச் செய்யப்படாத அமைப்புக்கள், தமிழீழ மக்களின் எதிர்காலம் தொடர்பில் நடத்தும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பொது விவாதம் ஒன்றைக்கோர வேண்டும் என்றும் செனட்சபை கோரியுள்ளது.
அ) எனவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், இலங்கையின் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு உட்பட்ட அனைத்து நீதி மறுப்புகளுக்கும் எதிராக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்.
ஆ) சர்வதேச ரீதியாக இலங்கையின் மனித உரிமைமீறல் நடவடிக்கைகள் தொடர்பில் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில் இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இ) லண்டனில் பேசப்பட்ட புனர்வாழ்வு விடயங்களில் உண்மைதன்மை இருக்குமாயின் அதற்கு பங்களிக்க வேண்டும்.
ஈ) இலங்கைக்குள் சர்வதேச மன்னிப்புசபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிகள் குழு என்பவற்றை அனுமதிக்குமாறு கோர வேண்டும்.
உ) இலங்கையின் பொருட்களை பகிஸ்கரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் ஈழத்தமிழர்கள் எதிர்கால பேச்சுக்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஓரங்கட்டப்படுவதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
விவாதிக்கப்படவேண்டிய கருத்துக்கள்
1) புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கப்படாமை
2) சொந்தக்கட்சியின் முழு ஆதரவில்லாமல், தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் லண்டன் பேச்சு தொடர்பில் பொதுஅறிக்கை ஒன்றை வெளியிட்டமை.
3) அரசியல் தீர்வு குறித்து பேசப்படாமல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் நடவடிக்கை பெரும்பாலும் நிதிசேகரிப்பை கருத்திற்கொண்டதாகும்
4) இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையானது தமிழர்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்லும் வகையில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை அழைத்து பேசியமை, செப்டெம்பர் மாத ஜெனீவா அமர்வில், இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணையை பிந்திப்போடுவதற்கான முயற்சியாகும்.
5) லண்டன் பேச்சுவார்த்தை, சிறிசேன அரசாங்கத்துக்கு எதிர்வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்புக்களுக்கு உதவும்
6) புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான பிரதிநிதிகள் என்று தம்மை அழைப்பவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர்.
7) சிறிசேன அல்லது விக்கிரமசிங்க ஆகியோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனையை நிராகரித்தால், ஐக்கிய நாடுகள் பேரவைக்கு எதுவும் செய்ய முடியாது.
8) தமிழர்களின் சுயநிர்யணத்துக்கான வாக்கெடுப்பு, ஐக்கிய நாடுகளின் தலைமையில் இலங்கை படையினருக்கு பதிலாக சர்வதேச படையினர் நிலைநிறுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும்
9) “பயங்கரவாதிகள்”(தமிழர்களை) தாம் அழித்ததாக இலங்கை அரசாங்கம் கூறுமானால், பயங்கரவாதத்துக்கு தடைச்சட்டத்துக்கு எதிராக பேசும் அனைத்து மனித உரிமை அமைப்புக்களும் தமது நிலைப்பாட்டில் இருந்து விலக வேண்டியேற்படும். அவ்வாறெனில் பயங்கரவாதிகள் என்போர் யார்? யாருக்காக அந்த சட்டம் அமுலாக்கப்படும் என்ற இரட்டைநிலைக் குறித்து ஆராயவேண்டும்.
10) போர்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணை என்பது ஏற்கமுடியாது.
11) தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை தொடர்பில் சிறிசேன அரசாங்கம் நம்பிக்கையான எதனையும் செய்யவில்லை.
12) வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய இனப்படுகொலை என்ற யோசனையை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது தமிழர் பிரச்சினையை தீர்க்க முதலாவது அங்கீகாரமாக இருக்கலாம். அத்துடன் இது இலங்கையின் அரசியல் அமைப்பினது 6வது திருத்தத்தை மீறும் செயற்பாடாகாது. என வலியுறுத்தப்பட்டடுள்ளது.