மஹிந்தவுக்கு வேட்புமனு இல்லை! தேசியப் பட்டியலும் வழங்கமாட்டேன்!! - மீண்டும் அடித்துக்கூறினார் மைத்திரி
பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் ஒருபோதும் வேட்புமனு வழங்கப்போவதில்லை என்றும் தேசியப் பட்டியல் எம்.பி. நியமனத்தை வழங்கவும் தான் தயாரில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திங்கட்கிழமை திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் முக்கியஸ்தர்களுடன் நேற்று முழு நாளும் பேச்சு நடத்தியுள்ளார். இடதுசாரிக் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தர் என சந்திப்பில் கலந்துகொண்ட இடதுசாரி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுரபிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, சு.கவின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோருடனும் ஜனாதிபதி நேற்று மாலை பேச்சு நடத்தியுள்ளார். தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, ஆசனப் பங்கீடு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளன.
அத்துடன், சுசில் பிரேமஜயந்த மஹிந்த அணியில் இணையவுள்ள விவகாரம் பற்றியும் அங்கு பேசப் பட்டுள்ளது. இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட அறுவரடங்கிய ஒருங்கிணைப்புக்குழு தனது அறிக்கையை இன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளது.