Breaking News

மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்

உறவை இழந்தவன் அநாதையாம், ஊரை இழந்தவன் அகதியாம். சொந்த ஊரை விட்டும், சொந்த நாட்டை விட்டும் அநாதரவாக இன்று 52 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

 உள்நாட்டு போரும் இனவாத மோதல்களும் இவ்வாறான அகதிகள் அந்தஸ்தை வழங்கியுள்ளது. அகதிகள் தொடர்பில் முதல் முதலாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உடன்படிக்கை 1951 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. இதில் ஒரு நாட்டின் இனக் குழுவொன்று அந்த நாட்டின் பாதுகாப்பை பெற முடியாத காரணமாகவோ அல்லது அந்த நாட்டின் பாதுகாப்பில் உள்ள அச்சுறுத்தல் காரணமாகவோ தமது நாட்டை விட்டோ அல்லது சொந்த ஊரை விட்டோ வெளியில் வாழ்பவர்களை அகதிகள் அல்லது ஏதிலிகள் என வரையறைப்படுத்தியுள்ளனர். 

அகதி என்பதற்கான வரையறையை உருவாக்கியுள்ள இந்த ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையை இன்று உலகில் 147 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் இந்தியா போன்ற நாடுகள் இந்த உடன்படிக்கையை இன்னமும் ஏற்றுக்கொள்ளாதுள்ளன.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆம் திகதி ஆபிரிக்க அகதிகள் தினமாகவே அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. எனினும் 2000 ஆம் ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 20 ஆம் திகதியை உலக அகதிகள் தினமாக அங்கீகரித்துள்ளது. உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற நாடுகளுக்கிடையிலான போர் மற்றும் இன வன்முறைகள், உள்நாட்டு வன்முறைகள் என்பவற்றின் காரணமாக நாடுகளை விட்டும் இடங்களை விட்டும் வெளியேறி அகதிகளாக வாழும் மக்கள் தொகை 52 பில்லியன் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டின் இறுதி அறிக்கையின் படி உலகில் அதிகமாக பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், மியன்மார்,சூடான், சிரியா,தீபெத் ,இலங்கை ஆகிய நாடுகளே அகதிகள் பட்டியலில் முதன்மை வகிக்கின்றன. அதேபோல் உள்நாட்டில் அகதிகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இலங்கை, இந்தியா, சூடான் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் சுட்டிக்காட்டப் படுகின்றன. இதில் சிரியா மற்றும் பாலஸ்தீனம் யுத்தத்தில் மில்லியன் கணக்கிலான பொதுமக்கள் இறந்ததுடன் பல மில்லியன் மக்கள் அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அதேபோல் உள்நாட்டிலும் பல மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். 

இதில் கடந்த ஆண்டு அறிக்கையின் படி சிரியாவில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் அங்கு அகதிகளின் எண்ணிக்கை 3 மில்லியன் பேரென தெரிவிக்கின்றது. அதேபோல் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 6.5 மில்லியன் ஆகும். இன்று உலகில் அதிக அகதிகளை உருவாக்கிய நாடு சிரியாவாகும். அதேபோல் பாலஸ்தீனம் மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் உலகில் அகதிகளின் எண்ணிக்கையை அதிகமாக கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடங்களில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

பல இலட்சம் உயிர்கள் இந்த நாடுகளில் காவுகொள்ளப்பட்டுள்ளதுடன் பல இலட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர். அதேபோல் மதக் கலவரங்கள் மற்றும் பேரினவாத அரசியல் தலையீடுகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இனப்பரம்பல் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. மியன்மாரில் இடம்பெறும் பெளத்த, முஸ்லிம் கலவரம் காரணமாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறினர். இந்த நிலைமை இன்னும் தொடர்கின்றது.

இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகால கொடிய யுத்தத்தில் வடக்கு, கிழக்கில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நாட்டை விட்டும் சொந்த ஊரை விட்டும் வெளியேறினர். இலங்கை இராணுவம் மற்றும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு இடையில் இடம்பெற்ற ஆயுத யுத்தம் நாட்டில் பல இழப்புகளை ஏற்படுத்தியது. இந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் எத்தனை ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற சரியான புள்ளிவிபரம் இதுவரையில் கிடைக்கவில்லை. 

சர்வதேச அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இந்த எண்ணிக்கையை கண்டறியும் பல வழிமுறைகளை கையாண்டும் அதேபோல் இலங்கை அரசாங்கம் தமது உள்ளக பொறிமுறைகளை பலப்படுத்தியும் இதுவரையில் எவ்விதமான முன்னேற்றகரமான விபரங்களையும் அவதானிக்க முடியவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமையம் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகளின் மூலம் யுத்தகால கட்டத்தில் காணாமல் போனோர் மற்றும் கொல்லப்பட்டோர் எண்ணிக்கையை கண்டறிய முயற்சிக்கின்றது. 

இலங்கையில் கடந்த ஆட்சியிலும் புதிய ஆட்சியிலும் இந்த உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்தும் தகவல்களை திரட்டி வருகின்றனர். ஆனால் இலங்கையில் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை மற்றும் காணாமல் போனோர் தொகை என்னவென்பது தொடர்பில் இன்றுவரை சூனியமாகவே உள்ளது.

அதேபோல் யுத்த காலகட்டத்தில் வடக்கில் இருந்து வெளியேறிய மக்கள் இன்றும் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகவும் வெளி மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் உள்நாட்டில் எத்தனை பேர் அகதிகளாக உள்ளனர் என்ற புள்ளிவிபரம் கூட சரியானதாக இல்லை. ஆனால் கடந்த யுத்த காலகட்டத்தில் வடக்கில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் இன்னமும் தமது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்படவில்லை என்பதே உண்மையாகும் . கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் நிலங்களில் இராணுவ முகாம்களும், அரசாங்கத்தின் சொகுசு வீடுகளும் மைதானங்களும் அமைக்கப்பட்டன. 

ஆனால் இடம்பெயர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக முகாம்களில் வாழ்ந்துவந்தனர். ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டவுடன் வெளிமாவட்டங்களில் இருக்கும் வடக்குவாழ் மக்களை மீளவும் அவர்களது சொந்த பகுதிகளில் குடியமர்த்தும் வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்­ப­டு­வதாக தெரிவித்தாலும் அதற்கான சரியான, முறையான நடைமுறைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. தமிழ் மக்கள் இன்றும் வடக்கைவிட்டு வேறு பகுதிகளில் அகதிகளாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் தான் வாழ்கின்றனர்.

இது ஒருபுறம் வடக்கு மக்கள் தமது சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலைமை இருக்க மறுபுறம் யுத்த பயத்தில் தமது உயிர்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள் பலர் இன்றும் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.கடந்த முப்பது ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற யுத்த சூழலில் வடக்கில் வாழ்த்த ஒவ்வொரு தமிழ் குடிமகனும் ஒரு தடவையேனும் இடம் பெயர்ந்துள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. 

1983 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடியும் வரையிலான காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்களின் எண்ணிக்கை தொகை ரீதியில் சரியாக குறிப்பிட முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் எண்ணிக்கையில் அதிகமான தொகையில் தாக்கத்தை செலுத்தும் என்பதே உண்மையாகும். குறிப்பாக 1983ஆம் ஆண்டுகளில் இருந்தே வடக்கில் உள்ள மக்கள் இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இந்தியாவில் இராமேஸ்வரம், மண்டபப்பகுதிகளில் இன்றும் அதிகளவான இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். 


அதேபோல் மேற்கு உலக நாடுகளிலும் குறிப்பிட்ட அளவிலான தமிழ் மக்கள் புலம்பெயர் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களை நாட்டுக்கு மீளவும் திருப்பி அழைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் மிகவும் தாமதமாகவே செயற்படுகின்றது. கடந்த 10 ஆண்டுகளாக புலம்பெயர் அகதிகளாக வாழ்ந்து வரும் எம் தமிழ் மக்களின் நிலைமைகள் இன்று மிகவும் மோசமானதாகவே அமைந்துள்ளன. அன்று நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் இனவாத அடக்குமுறைகளுக்கும் அஞ்சி நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் இன்று எந்த நாடும் இல்லாது சொந்த நாட்டுக்கும் திரும்ப முடியாது தவிக்கின்றனர்.யுத்த காலகட்டத்தில் நாட்டை விட்டு வெளியேறிய மக்களின் ஐந்து வீதமானோரே மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். எஞ்சிய மக்கள் பாதுகாப்பு காரணம் கருதி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அண்மையில் கனடாவில் புதிய குடிவரவுச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் கனடாவில் வசிக்கும் சுமார் ஒரு இலட்சம் மக்கள் அந்த நாட்டில் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் பிரஜாவுரிமை சட்டத்துக்கு அமைய அந்த நாட்டு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்ற கொள்கை மற்றும் பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு அந்த நாட்டில் குடியேறிய மக்களை திரும்ப அனுப்பவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 


ஆகவே சுமார் ஒரு இலட்சத்து 50ஆயிரம் இலங்கையர்கள் மீளவும் நாடு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆயினும் நாடு திரும்ப தமிழ் மக்கள் தயாராகவே உள்ளனர். கனடாவில் மட்டும் அல்ல நாடுகடந்த நிலையில் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும் மீண்டும் தாயகம் திரும்பும் கனவுடனும் ஆவலுடனும் வாழ்கின்றனர். அவர்களில் மண்ணில் மீண்டும் வாழவேண்டும் என்ற உணர்வுகளுடன் காத்திருக்கின்றனர்.ஆனால் இலங்கை அரசாங்கம் மீண்டும் அவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில் தெளிவான பதிலை தெரிவிக்காது உள்ளது. 


முன்னைய அரசாங்கம் தமது அரசியல் நோக்கங்களுக்காகவும் இனவாதஆட்சியை பலப்படுத்தவும் புலம்பெயர் தமிழர்களை புலிகள் என்ற முத்திரை குத்தி நாட்டில் இருந்து நிரந்தரமாக பிரித்துவிட்டது. புலம்பெயர் தமிழர்களையும் அவர்கள் சார் அமைப்புகளையும் புலிகள் இயக்கம் என்று பச்சைகுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்திவிட்டனர். அதன் தாக்கம் இன்றும் நாட்டில் பிரதிபலிக்கின்றது. ஆட்சி மாறினாலும் ஒரு சில விடயங்களில் மக்களின் மனநிலை மாறவில்லை. வெளிநாடுகளில் வாழும் நம் தமிழர்களின் மூலம் மீண்டும் இந்த நாடு அச்சுறுத்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற எண்ணம் இன்றும் இலங்கையில் உள்ளது.

எனினும் இந்த அரசாங்கம் புலம் பெயர் தமிழர் அமைப்புகளுடன் தொடர்புகளை பலப்படுத்தி சர்வதேச மாநாடுகளையும் நடத்துகின்றது. அண்மையில் லண்டனில் உலகத் தமிழர் பேரவையுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன் போது வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிக்கான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்பட்டது. 

இவை தொடர்பில் தெளிவானதும் முழுமையானதுமான தகவல்கள் இன்னும் ஊடகங்களையும் மக்களையும் சென்றடையவில்லை. அதேபோல் கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற அகதிகளின் தொகை மிகவும் அதிகமானதாகும். இந்த மக்கள் தமது உயிர்களை பாதுகாக்கும் எண்ணத்தில் ஆழ்கடலில் தமது உயிர்களை பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் படகுகளுடன் ஆழ்கடலில் மூழ்கியும், திசை மாறி பயணித்து தமது உயிரை மாய்த்துள்ளனர். இவை அனைத்தும் கடந்த கால யுத்தத்தின் மூலம் எம் மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள் என்பதே உண்மையாகும். 


எந்தவொரு மனிதனும் தனது உயிரை வீணாக மாய்த்துக்கொள்ள விரும்ப மாட்டான். ஆனால் எமது சொந்தங்கள் தமது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக அச்சுறுத்தலான பயணங்களையும் முடிவுகளையும் எடுக்க நேர்ந்தது. எனவே வடக்கில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் சாதாரணமானதேயாகும். தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். அதேபோல் உள்நாட்டிலேயே வேறு பகுதிகளுக்கு தமது உறவுகளுடன் இடம்பெயர்ந்தனர். இவ்வாறு தமது சொந்த நிலங்களையும் காணி, பூமியையும் இழந்த மக்கள் இன்று அகதிகள் என்ற போர்வையில் வலிகள் சுமந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்.

இவர்கள் தொடர்பில் அக்கறைப்படவும் கவலைப்படவும் எவரும் இல்லை. அரசியல் தலைமைகள் தமது அரசியல் சுயநலத்துக்காக மக்களின் வேதனைகளை விற்று வாழ்க்கை நடத்துகின்றனர். யுத்தத்தின் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் மிஞ்சியிருக்கும் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் சென்று தமக்கான வரப்பிரசாதங்களை அனுபவிப்பதுடன் மறந்துவிடும் தலைமகள் இன்று கூட்டணிகளையும் அமைப்புகளையும் ஆரம்பித்து வாய்கிழியப் பேசுவதுடன் முடிந்து விடுகின்றது. 

அதைத்தாண்டி தமிழ் மக்களை மீண்டும் அவர்களது சொந்தப் பகுதிகளில் மீளவும் குடியமர்த்தும் நடவடிக்கைகள் எவராலும் முன்னெடுக்கப்படவில்லை. அரசியல் மேடைகளில் போலி வேஷம் போடும் தலைமைகளை நம்பி எமது மக்கள் சொந்த ஊரையும் சொந்த நாட்டையும் இழந்து நிற்கின்றனர். இவர்கள் மீண்டும் தமது தாயகத்தில் சந்தோசமாக வாழவேண்டிய காலம் எப்போது வரும் என்ற ஏக்கம் அனைவரது மனங்களிலும் உள்ளது. மீண்டும் இந்தத் தாயகம் எமது உறவுகளை எப்போது அழைக்கப்போகின்றது. இந்தத் தாயகம் மீண்டும் அழைத்தால் எம் உறவுகள் எம் நாட்டை நேசித்து வருவார்கள். 

அவர்களின் எதிர்பார்ப்புகளையும் கனவையும் நனவாக்கும் நாள் வெகு விரைவில் வர வேண்டும். அதேபோல் இன்று உலகில் பல மில்லியன் மக்கள் தமது சொந்த நாடுகளை இழந்து அகதிகள் என்ற ஒரே அந்தஸ்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீண்டும் அவர்களது சொந்த நாடுகளை சென்றடைய வேண்டும். இனம், மதம், மொழி ரீதியில் மக்கள் பிரிந்து இருந்தாலும் மக்களின் உணர்வுகள் அவர்களின் எதிர்பார்ப்புகள் என்பவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

 இன்று அகதிகள் தினம் உருவாகும் அளவுக்கு அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்த நிலைமை மாற்றமடைந்து மக்கள் தமது சொந்த நிலங்களில் உரிமைகளுடனும் சுதந்திரத்துடனும் வாழவேண்டும். ஒருநாட்டின் அரசியல் சூழ்நிலை சுமுகமாக மாறினால் அந்த நாட்டின் மக்கள் பரம்பலும் அமைதியாக வாழும். இதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். அகதிகளுக்கான அந்தஸ்த்தை மீண்டும் நாட்டில் வழங்க முன்வரவேண்டும்.

-ஆர்.யசி