மனிதர்களின் முன்னேற்றப்பாதைக்கு யோகா வழிவகுக்கும்: மோடி
மனிதர்கள் முன்னேற்றப் பாதையில் செல்ல யோகா வழிவகுக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தின் பிரதான நிகழ்வு இன்று காலை டில்லியில் ராஜபாதையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, டில்லி ராஜ்பாத் சாலை, யோகா பாதையாக மாறும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். யோகா மனித மூளைக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
மனிதர்கள் முன்னேற்றப் பாதையில் செல்ல யோகா வழிவகுக்கும். யோகா என்பது கொண்டாடுவதோடு முடிந்து விடாது அது கொண்டாடப்படவேண்டியது. மனதை அமைதிப்படுத்த உதவும் கலை யோகா. இன்று யோகா தினமாக அறிவித்த ஐ.நா.,வுக்கும் அறிவிக்க உதவிய 117 உலக நாடுகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காலை 6.40 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ராஜபாதைக்கு வந்தடைந்தார்.
காலை 7 மணி முதல் 7.35 மணி வரை மொத்தம் 35 நிமிடங்களுக்கு 35 ஆசனங்கள் அதாவது ஒரு நிமிடத்தில் ஒரு ஆசனம் செய்து முடிக்கப்பட்டது. கின்னஸ் சாதனை படைக்கும் முகமாக பிரதமர் மோடி தலைமையில் 40 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி இந்த யோகா பயிற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.