Breaking News

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வந்தே தீரும் - ஹக்கீம்

யாழ்ப்பாணத்திற்கு தேவையான குடிநீரை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

 தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வடபிராந்திய உதவிப்பொது முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில், 

 இந்த அலுவலகம் இரணைமடுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகச் செயற்பட்டு வந்தது. இனியும் அவ்வாறே செயற்படும். தற்போது 40 ஆயிரம் ஏக்கருக்கு நீர்வழங்கக்கூடிய வகையில் இரணைமடுக் குளத்தின் நீர் கொள்ளளவு காணப்படுகிறது. 

இந்த நிலையிலேயே விவசாயிகள் மேலதிக நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவதற்கு தமது ஆட்சேபத்தைத் தெரிவிக்கின்றனர். எனவே எதிர்காலத்தில் இரணைமடு குளத்தின் நீர்கொள்ளளவை 80 ஆயிரம் ஏக்கருக்கு ஏற்றதாக வீஸ்தரித்து அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்துக்கான குடிதண்ணீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.