எமது மண்ணில் தொழில் அனுமதி மறுக்கப்படுகிறது! நாயாறு மீனவர்கள் ஆதங்கம்
முல்லைத்தீவு நாயாறில் பூர்வீகமாக வாழும் மீனவர்கள் எமது மண்ணில் எமக்கே தொழில் அனுமதி மறுக்கப்படுவதாக ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். இப்பிரதேச மீனவர் ஒருவரை வெளியேற்றுவதற்கு திட்டமிட்ட நடவடிக்கை இடம்பெற்றுள்ளமையையடுத்தே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
1998ஆம் ஆண்டிலிருந்து தன்னுடைய சொந்த ஊரிலே கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டவரும் 2012ஆம் ஆண்டில் இலங்கை கடற்றொழில் அமைச்சரால் குறித்த பகுதியில் கரைவலைத் தொழிலை மேற்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியைப் பெற்றவருமான தனேஸ்குமார் என்கின்ற முல்லை நாயாறைச் சேர்ந்த தமிழ் மீனவரையே வெளியேற்றும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 30 ஆம் திகதி வருகை தந்திருந்த கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தால் முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்தில் வைத்து தனேஸ் குமாரை வெளியேறுமாறும் குறித்த கரைவலைப்பாடு தென்னிலங்கை மீனவருக்கு வழங்கப்படவுள்ளது எனவும் முறையற்ற வகையிலான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் விஜயம் செய்தார். அங்கிருந்த நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
457 மீற்றர் தூர கரைவலை தொழில் அனுமதியைப் பெற்றிருந்த தனேஸ்குமார் 150 m வரையான பகுதியிலேயே தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
பாறைகள்,கட்டைகள் என்று சீரற்ற பகுதியாக இருந்த அந்தப்பகுதியை சீர் செய்து அப்பகுதியில் அவர் கரைவலைத் தொழிலை மேற்கொண்டு வருகையில், கடந்த மே மாதம் 30ஆம் திகதி முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்தில் வைத்து கடற்றொழில் பணிப்பாளர் நாயகத்தினால், போலியான வரைபடம் ஒன்றின் அடிப்படையில் தனேஸ்குமாரின் கருத்துக்களை கேட்டறியாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கரைவலைப்பாடு தென்னிலங்கை மீனவருக்கு வழங்கப்படவுள்ளது என்று தனேஸ்குமாரை வெளியேறுமாறும் தீர்ப்பைக்கூறிவிட்டு சென்றிருக்கின்றார். எமது மண்ணில் எமக்கே அனுமதி மறுக்கப்படுகிறது என நாயாறு மக்கள் ஆதங்கத்துடன் கருத்து வெளியிட்டனர். குறித்த மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளேன் என்றார்.