ஜனவரி 8இல் நிராகரிக்கப்பட்ட மஹிந்த! பின் கதவால் பிரதமராக முயற்சி - ரணில்
ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பின் கதவால் புகுந்து பிரதமராகுவதற்கு துடித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை புலிகள் என்று கூறுகின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காவத்தை இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர்கள் விடுதலையானமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களையும் புலிகள் என்று அவர் கூறுவாரா என்றும் பிரதமர் கேள்வியெழுப்பினார்.
ஜனநாயக மக்கள் முன்னணி கண்டி மாவட்ட பேராளர் மாநாடு முன்னணி உபதலைவர் வேலு குமாரின் ஏற்பாட்டில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கண்டி புஸ்பதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்து கேள்வியெழுப்பினார்.
பிரதமர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி தேர்தலில் நிராகரித்துவிட்ட போதும் அவர் இன்று பின் கதவால் பிரதமராக வருவதற்கு முயற்சிக்கின்றார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அவரை வீட்டிற்கே விரட்டிவிட்டனர். என்றாலும் அதனை அவர் மறந்து பின் கதவால் நுழையவே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைத்த மக்கள் ஆணையினால் சிலர் பாராளுமன்றத்திற்குள் இன்னும் இருப்பதை தெரிந்துக்கொண்டும் பிரதமர் ஆகிய என்னை அகற்ற முயல்வது ஒரு போதும் நடைபெறப்போவதில்லை.
ஜனநாயக மக்கள் முன்னணியும் அதன் தலைவர் மனோகணேசனும் இன்றைய நல்லாட்சி தோன்றுவதற்கு பெரும் பங்காளிகளாக செயற்பட்டுள்ளமையை மறந்து விடமுடியாது. 25 மாவட்டங்களிலும் உயர்கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து மக்களும் ஜனநாயக ரீதியாக இன,மத மொழி பேதங்கள் இன்றி சம உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் கட்சியாக விளங்கி வருகின்றது. அதே போன்று சகல இன மக்களும் சமமான உரிமைகளோடு வாழ்வதற்கான வழி வகைகளை நாம் ஏற்படுத்தி வருகின்றோம்.
ஜனநாயக மக்கள் முன்னணியும் அதன் தலைவர் மனோ கணேசனும் மலையக தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல தேசிய ரீதியில் அனைத்து மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றனர். மக்கள் ஆணையை மீறி செயல்பட எவரும் முயலக்கூடாது என்பதை புரிந்துக் கொண்டும் உணர்ந்து கொண்டும் செயல்படுவார்களேயானால் அது நாட்டிற்கும் மக்களுக்கும் சிறந்த சேவையாக அமையும் என்றார்.