Breaking News

டைட்டானிக் திரைப்பட இசையமைப்பாளர் விமான விபத்தில் காலமானார்

டைட்டானிக், அப்பலோ 13 உள்ளிட்ட புகழ்பெற்ற ஹொலிவுட் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹொனர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார் .

பீல்ட் ஓஃப் ட்ரீம்ஸ், பிரேவ்ஹார்ட், டைட்டானிக், ஏலியன்ஸ், அப்பலோ 13, அவதார், எ பியூட்டிஃபுல் மைண்ட், ஸ்டார் ட்ரெக் பாகம்- 1, 2 போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர் ஜேம்ஸ் ஹொனர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா அருகே திங்கட்கிழமை காலை தனது சொந்த விமானத்தில், ஹொனர் பயணித்துக் கொண்டிருந்தபோது அவரது விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கரமான விபத்தில், ஹொனர் பலியானது உறுதி செய்யப்பட்டதாக அவரது உதவியாளர் சில்வியா பாட்ரிக்ஜா தெரிவித்தார். ஜேம்ஸ் ஹொனர் தனது சொந்த விமானத்தை ஓட்டிக் கொண்டு சென்றபோது விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் விபத்துக்கான காரணம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

2 முறை ஒஸ்கார் விருது, 4 கிராமி விருதுகள், கோல்டன் க்ளோப் என ஜேம்ஸ் ஹொனர் பெற்ற விருதுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர் இசை அமைத்த ‘டைட்டானிக்’ திரைப்படம் 11 ஒஸ்கார் விருதுகளை பெற்றது. அப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன், ஒரு விழாவில் பேசும்போது, “இந்த விருதுகள் படத்தின் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் ஹொனரையே சாரும். நான் ஒரு கப்பலை மட்டுமே உருவாக்கினேன். அதற்கு இசை மூலம் உயிர் கொடுத்தது ஹொனர்” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.