வடக்கில் 700 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
வட மாகாண இளைஞர்கள் 700 பேருக்கு தொழில் பயிற்சிகள் வழங்க ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளதாக, இலங்கைக்கான மாலை தீவுக்கான ஜேர்மனிய தூதுவர் ஜோர்கன் மோர்கார்ட் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவுடன் கலந்துரையாடினார்கள்.
வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் சுமார் 2 மணித்தியாலயங்கள் இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜேர்மனிய தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜேர்மனிய அரசாங்கத்தினால் கல்விச் செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதிகள் எந்தளவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பதனையும் ஆராய்ந்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு நிறைவில் அல்லது 2016ம் ஆண்டு ஆரம்பத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொழில் பயிற்சி நிலையம் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இங்கு அவர் மேலும் சுட்டிக்காட்டினார். தொழில் பயிற்சி நிலையம் தற்போது அங்கு நிறுவப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதி அந்த தொழில் பயிற்சி நிலைய கட்டிடம் முடிவடைந்த பின்னர் 700 இளைஞர், யுவதிகளுக்கான தொழில் பயிற்சிகள் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.