மாநாட்டுக்கு அனுமதியோம்! புலம்பெயர்ந்தோரின் வருகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.
இலங்கையில் புலம்பெயர் தமிழர்களுக் காக நடத்தப்படவுள்ள மாநாட்டை கடுமை யாக எதிர்ப்பதாகவும் இதனை தடுத்து நிறுத்த சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுக்கும் அரசின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய, இம் மாநாட்டுக்காக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு 3.1 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அறிவித்தது.
பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமய அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அதன் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ண சிங்க இதனைத்தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இலங்கையில் மாநாடு நடக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை.
எனவே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, புலம்பெயர் தமிழர்களுக்கும் அமைப்புக்களுக்கும் இங்கு நடத்தவுள்ள மாநாடு தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
இவ்வாறானதொரு மாநாட்டை நடத்த அமைச்சர் மங்களவுக்கு யார் அதிகாரம் வழங்கினார்கள்? புலம்பெயர் தமிழர்கள் என்பதும் விடுதலைப்புலிகள் என்பதும் தனித்தனி அமைப்புக்கள் அல்ல. இரண்டுமே தனித் தமிழீழ பிரிவினையை வலியுறுத்தும் அமைப்புக்களாகும்.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களே புலம்பெயர் தமிழர்கள் ஆவார்கள். இதில் எந்தவிதமான சந்தேகத்திற்குமே இடமில்லை. ஐக்கிய இலங்கையில் பிரிக்கப்படாத நாட்டை எதிர்ப்பவர்களே இவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே அரசியலமைப்பை மீறிய செயற்பாடாகும் எந்த இடத்திலும் அரசியலமைப்பில் ஐக்கிய இலங்கை என குறிப்பிடப்பட்டதில்லை. ஒற்றையாட்சிக்குள் பிரிக்கப்படாத இலங்கை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்களவின் புலம்பெயர் தமிழர்களுக்கான மாநாடு நாட்டுக்கு அமங்களமாகவே அமையப்போகின்றது.
இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவதால் சமாதானத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் பெரும் பாலானோரின் பெயர்கள் எமது நாட்டின் தடை செய்யப்பட்ட பெயர்ப்பட்டியலில் உள்ளன.
இவ்வாறானவர்களை நாட்டுக்குள் அழைப்பதே சட்ட விரோதமாகும். எனவே இவ்வாறு இவர்கள் இலங்கை வருவதை தடை செய்ய நாம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். இலங்கையை அழிப்பதற்கு பணம் ஆயுதம் வழங்கியவர்களும் இந்த புலம்பெயர் அமைப்புக்களை சேர்ந்தவர்களே ஆவார்.
அத்தோடு இந்த விழாவுக்காக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு 3.1 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளது. இந்தத் தொகை எதற்காக வழங்கப்படுகிறது என்ற சந்தேகம் வருகிறது. புலம்பெயர் தமிழர்கள் இன்னமும் தாம் பிரிவினையை கைவிட்டதாக பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இதேவேளை தமிழர்களை மீளக்கட்டியமைப்பதற்கும் இவர்கள் எந்தவிதமான பங்களிப்பையும் வழங்கவுமில்லை.
நாடு கடந்த தமிழீழ அரசு கலைக்கப்படவுமில்லை. எனவே இவர்கள் மீது எப்படி நம்பிக்கை வைப்பது. இந்தக் கூட்டம் பிரபாகரன் மரணிக்கவில்லை என்று இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளது. 'டயஸ்போரா' என்றால் அது புலிகளின் செயற்பட்டாளர்கள் என்ற எண்ணம் இலங்கையர்கள் மத்தியில் பதிந்து போயுள்ளது.
நாட்டுக்குத் மீண்டும் நம்பிக்கையீனத்தை தோற்றுவிக்க முயற்சிக்கும் சந்திரிக்கா மங்களவின் முயற்சிகளை வெற்றி பெற இடமளிக்கமாட்டோம் என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதிச்செயலாளர் அனுருத் பிரதீப் மற்றும் சட்ட ஆலோசகர் டியூடர் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.