ராஜிதவுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது அதனாலேயே பொய் கூறுகிறார்: வாசு விசனம்
மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர சகல வகையிலான முயற்சிகளையும் எடுப்போம். மஹிந்தவை பிரதமராக்குவதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தீர்மானமாகும் என்று மஹிந்த ஆதரவுக் கூட்டணி தெரிவித்தது.
பிரதமர் பதவிக்கு ராஜித ஆசைப்படுகின்றார். அதனாலேயே அமைச்சரவையிலும் பொய் சொல்கின்றார் என்றும் அந்தக் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் மஹிந்தவுக்கு இடம் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் மஹிந்த ஆதரவுக் கூட்டணியின் நிலைப்பாட்டினை வினவிய போதே முன்னால் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் ஒன்றிணைத்து கட்சியை முன்னெடுத்து செல்வது அமைச்சர் ராஜித போன்ற ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. கட்சியில் இருக்கும் முக்கிய இருவரான மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைதிரியை பிரித்து கட்சியை பிளவுபடுத்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.
அமைச்சரவையின் செய்தியாளர் சந்திப்பில் ராஜித சேனாரத்ன பொய் கூறிவிட்டார். அவரது கருத்துக்கள் மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஆறுபேர் கொண்ட குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். அதேபோல் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்னமும் கூடவில்லை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் சந்திப்பும் இன்னமும் நடைபெறவில்லை.
ஆகவே இதுவரையில் கட்சிக்குள் ஏகமனதான தீர்மானம் என்னவென்பது தெரியாது அமைச்சர் ராஜித எவ்வாறு மகிந்தவுக்கு கட்சியில் இடம் இல்லை என்ற கருத்தினை முன்வைக்க முடியும்? இந்தக் கருத்து மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது.
அதேபோல் அமைச்சர் ராஜித அடுத்த பிரதமருக்கான கனவு காண ஆரம்பித்துவிட்டார். அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சி நடத்த வேண்டும் என்ற ஆசை அவருக்கும் வந்துவிட்டது.
ஒரு புறம் எதிர்க்கட்சி தலைவர் தனக்கு பிரதமர் பதவி வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகின்றார். மறுபக்கம் ராஜித பிரதமர் ஆகவேண்டும் என்று கனவு காண்கின்றார். இதனால் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகிய இருவரும் கட்சியில் ஒன்றிணைவதை இவர்கள் விருப்புவதில்லை. இவர்கள் என்ன நினைத்தாலும் மக்கள் அனைவரும் மஹிந்தவை அதிகாரத்துக்கு கொண்டுவருவதையே விரும்புகின்றனர்.
ஆகவே மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சகல நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். மஹிந்த ஆட்சியை மீண்டும் உருவாக்க எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்குள் பலர் பிரதமர் ஆவதற்கு கனவு கண்டாலும் மஹிந்தவே அடுத்த பிரதமர் என்பதை நாம் தீர்மானித்து விட்டோம். ஆகவே அதற்கமைய எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம்.
முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண இது தொடர்பில் கூறுகையில்,
இது வரையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் யார் பிரதமர் வேட்பாளர் என்ற இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மஹிந்தவை ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்ற இறுதித் தீர்மானம் கட்சியின் மத்திய குழுவினால் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் அமைச்சர் ராஜிதவின் கருத்துக்கள் தொடர்பில் நாம் எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம். யாருடைய அனுமதியில் ராஜித இந்தக் கருத்தினை முன்வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதியின் பெயரிலேயே இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்று ஜனாதிபதி எடுத்த தீர்மானமாகவே அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆகவே இந்த விடயம் தொடர்பில் தமது விளக்கத்தை ராஜித கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.