மைத்திரியின் யோசனையை நிராகரித்த மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அரசியலில் இருந்து விலகி னால் அவருக்கு கௌரவப் பதவியொன்றை வழங்கத் தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த போதிலும் அந்த யோசனையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதியின் கோரிக்கைக்கான பதிலை விரைவில் வெளியிடுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணைப்புக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கில் ஆறு பேர் கொண்ட இணைப்புக் குழு ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். குறிப்பாக அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடிய போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தக் கோரிக்கையினை நிராகரித்துள்ளார்.
அதேபோல் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் திட்டம் இல்லை எனவும் தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்துக்கு அனுமதிக்கும் நோக்கமும் தற்போது இல்லையெனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டால் கௌரவமான பதவியொன்றை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையினை ஆறு பேர் கொண்ட குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் தெரிவித்த போதிலும் ஜனாதிபதியின் கோரிக்கையை மஹிந்த நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் டிலான் பெரேரா எம்.பி. தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கலந்துரையாடியும் ஜனாதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வகையில் செயற்படவில்லை. எனினும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு கௌரவப் பதவி ஒன்றினை வழங்குவதாக எம்மிடம் தெரிவித்ததுடன் இந்த விடயம் தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷவின் நிலைப்பாட்டினை தெரிவிக்குமாறு குறிப்பிட்டார்.
இந்த விடயத்தை நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் தெரிவித்தோம். அவர் இந்தப் பதவிகளை தான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லையென தெரிவித்து விட்டார். தான் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், மக்களுக்காக மீண்டும் சேவையாற்றவே தான் விரும்புவதாகவும், அத்தோடு இந்த விடயம் தொடர்பில் விரைவில் அறிக்கை ஒன்றினை வெளியிடுவதாகவும் மஹிந்த ராஜபக் ஷ குறித்த சந்திப்பின் போது தெரிவித்தார் என்றார்.
மேலும் ஆறு பேர் கொண்ட இந்தக் குழுவினர் மீண்டும் நாளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதன்போது மீண்டும் கட்சிக்குள் இருக்கும் சிக்கல் நிலைமை தொடர்பிலும், கட்சியை ஒன்றிணைத்து செயற்படுவது தொடர்பிலும் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.