நீதிமன்றம் தாக்குதல்! 6 மாணவர்களுக்குப் பிணை ஏனையோர் தொடர்ந்தும் மறியலில்
யாழ்ப்பாணத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர்
என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 130 பேரில் 40 பேர் அடங்கிய தொகுதியினர் இன்று யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 6 பேருக்கு நிபந்தனை அடிப்படையிலான பிணை வழங்கிய அதேசமயம் ஏனையோரை தொடர்ந்து 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
கலகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 40 பேர் அடங்கிய ஒரு தொகுதியினர் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் 6 மாணவர்களுக்கும் நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.
குறிப்பாக அவர்கள் 2 லட்சம் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல மன்று அனுமதியளித்த அதேசமயம் 6 மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடம் மற்றும் கிராம சேவையாளரால் இங்கு வசிப்பவர் என்ற உறுதிக்கடிதம் என்பனவும் மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.அத்துடன் குறித்த மாணவர்களை கண்காணிப்பதற்காக சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள் நீதிவானால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்களான 6 மாணவர்கள் தவிர்ந்த 34 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.