Breaking News

‪யாழில் 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன‬! யாழ்.பாதுகாப்புப்படைகளின் கட்டளைத்‬ தளபதி

யாழ்பாணத்தின் பாதுகாப்புக்கு தேவையான இராணுவ முகாம்களை தவிர அங்கு காணப்பட்ட 59 இராணுவ முகாம்கள் இதுவரை அகற்றப்ப ட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஊடகவியலாளர் சந்திப்பு பலாலி இராணுவ தலைமையகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இராணுவத்தினரால் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்கள் விமானம் மூலம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பலாலி விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .

இங்கு கருத்து தெரிவித்த யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த-

யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பு மற்றும் சிவில் தேவைகளுக்காக சுவிகரிக்கப்பட்டிருந்த 19 ஆயிரத்து 159 ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி குறிப்பிட்டார்.

இதன்படி 51ஆம் , 52ஆம் மற்றும் 55 படைப்பிரிவினரின் கட்டுப்பாட்டிலிருந்த 12,901 ஏக்கர் காணியும் பலாலி முகாமின் கட்டுப்பாட்டிலிருந்த 6,258.38 ஏக்கர் காணியும் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டளைத் தளபதி மேலும் கூறினார்.

யுத்தம் நிறைவுபெற்ற போது யாழ்ப்பாணத்தில் 152 இராணுவ முகாம்கள் இருந்த போதும் தற்போது அந்த எண்ணிக்கை 93 வரை குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதன்படி 59 இராணுவ முகாம்கள் முற்றாக அகற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் யாழ்.குடாநாட்டில் 99.44 வீதமான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற பின்பு ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வளலாய் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.